தாழ்வான மின்கம்பியால் விபத்து ஏற்படும் அபாயம்
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பகுதியில் பொம்மிடி, கே.என்.புதூர், முத்தம்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, ராமியம்பட்டி, கடத்தூர், உள்ளிட்ட துணை மின்நிலையங்கள் உள்ளன.
இந்த மின் நிலையங்களில் இருந்து வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், விவசாய நிலங்கள் ஆகியவற்றிக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. கிராம பகுதிகளில் விவசாய நிலங்கள், சாலையோரங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் என ஏராளமான இடங்களில் மின்கம்பிகள் கையில் எட்டும் அளவிற்கு மிகவும் தாழ்வாக செல்கின்றன.
இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் டிராக்டர், பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள், புல்கட்டு ஏற்றி செல்லும் வாகனங்கள் மின்கம்பிகளில் உரசி மின் விபத்துக்கள் ஏற்பட்டு சேதம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் அபாய நிலை இருந்து வருகின்றது.
இதை தவிர பல இடங்களில் கம்பிகளில் மரங்களில் உள்ள கிளைகள் உரசி மின் விபத்து ஏற்பட்டு கரும்பு பயிர்கள் எரிந்து விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டு வருவது தொடர்ந்து வருகின்றது.
இதேபோல் மின்கம்பங்கள் பழுதாகி மின்கம்பிகள் வெளியே தெரிந்து எப்போது விழுந்து ஆபத்து ஏற்படுத்துமோ என்ற வகையில் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கூறுகையில், மாதந்திர பராமரிப்பு நாட்களில் மின்துறையினர் இதுபோன்று ஆபத்தான மின் கம்பிகளை தேர்வு செய்து சரி செய்ய வேண்டும். அவற்றை சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu