பாலக்கோட்டில் உணவு பாதுகாப்புத்துறை சோதனை: விதிமீறிய கடைகளுக்கு அபராதம்

பாலக்கோட்டில் உணவு பாதுகாப்புத்துறை சோதனை: விதிமீறிய கடைகளுக்கு அபராதம்
X

உணவங்களில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் 

சோதனையின்போது விதிமுறை மீறிய உணவக உரிமையாளர்களுக்கு தலா ரூ.1000 வீதம் அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது

மாநிலம் முழுவதும் உள்ள அசைவ உணவகங்கள், இறைச்சி கடைகளில், சவர்மா, தந்தூரி சிக்கன், கிரில் சிக்கன் உள்ளட்டவற்றை ஆய்வு செய்து, குளிர்பதன பெட்டி, ப்ரிட்ஜ் ஆகியவை முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என கண்காணித்து தவறு இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உணவு பாதுகாப்பு துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அறிவுரைப்படி, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பானுசுஜாதா, மேற்பார்வையில் மாவட்ட முழுவதும் தொடர்ச்சியாக உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக பாலக்கோட்டில் உள்ள அசைவ உணவகங்கள், துரித உணவகங்கள், தாபாக்கள் மற்றும் இறைச்சி கடைகளில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், உள்ளிட்ட குழுவினர் பாலக்கோட்டில் தர்மபுரி ரோடு, தக்காளி மார்க்கெட், எம்.ஜி.ரோடு, பைபாஸ் மற்றும் புறவழிச் சாலை, சுற்று வட்டார பகுதியில் உள்ள உணவகங்களில் திடீர் ஆய்வு செய்தனர்.

இதில் சுமார் 15-க்கும் மேற்பட்ட உணவகங்களில் ஆய்வு செய்ததில் 3 உணவகங்களில் இருந்து நாள்பட்ட இறைச்சியும், குளிர் பதன பெட்டியில் வைத்திருந்த சமைத்த இறைச்சி 10 கிலோ மற்றும் வேக வைத்த கெட்டியான நிலையில் இருந்த 5 கிலோ பருப்பு ஆகியவை அழிக்கப்பட்டது.

மேலும் 2 உணவகங்களில் இருந்து தரம் குறைவான மையோனஸ் மற்றும் காலாவதியான பால், பட்டர் பாக்கெட்டுகள், சோயா சாஸ் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தப்பட்டது.

ஆய்வின் போது ஒரு டீக்கடையில் இருந்து தேயிலையை பரிசோதித்ததில் கலப்படம் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேற்படி விதிமுறை மீறிய உணவக உரிமையாளர்கள் மற்றும் டீக்கடைக்காரர் என 5 நபர்களுக்கு தலா ரூ.1000 வீதம் அபராதம் விதித்து உடன் எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

மேலும் உணவகங்களில் இறைச்சி மற்றும் மூலப்பொருள்கள் தரமானதாகவும் உரிய நாளுக்குள் பயன்படுத்த தக்க வகையிலும் இருக்க வேண்டும். உணவு பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினர்.

சமையலறை மற்றும் குளிர்பதன பெட்டி, ப்ரிட்ஜ் உள்ளிட்டவற்றை அடிக்கடி கண்காணிக்கவும், அனைத்து உணவகங்களும் உரிய உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று நுகர்வோர் காணும் வகையில் மாட்டி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

Tags

Next Story
எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!..டிங்கா டிங்கானு ஒரு நோயாமா..பேரு தாங்க அப்டி,ஆனா பயங்கரமான நோய்!..