குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் லட்சார்ச்சனை திருவிழா
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் 59-வது ஆண்டு கந்த சஷ்டி லட்சார்ச்சனை திருவிழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது.
விழாவை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் கோவில் பிரதான மண்டபத்தில் சிறப்பு யாகசாலை பூஜைகள் மற்றும் கணபதி பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து யாக சாலையில் இருந்து மேளதாளத்துடன் ஊர்வலமாக புனிதநீர் கொண்டு செல்லப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதை அடுத்து சாமிக்கு லட்சார்ச்சனை தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று நேற்று மாலை வரை சிறப்பு லட்சார்ச்சனை மற்றும் அபிஷேக ஆராதனை, திருமுறை பாராயணத்துடன் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நாளான நேற்று இரவு அலங்கரிக்கப்பட்ட தங்க மண்டபத்தில் சுப்பிரமணிய சாமி மற்றும் சூரபத்மன் புறப்பாடும், தொடர்ந்து பைபாஸ் ரோட்டில் உள்ள சாமி நிலத்தில் வானவேடிக்கையுடன் சூரசம்ஹார விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சூரபத்மனை முருகப்பெ ருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு உபகார பூஜைகள் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது.
இதில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கரகசத்துடன் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 12 மணிக்கு கோவிலில் சாமிக்கு பன்னீர் அபிஷேகம் நடைபெற்றது.
இன்று காலை 9 மணிக்கு பூர்த்தி ஹோமமும், இடும்பன் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகளும் நடைபெற்றது
இரவு 8 மணிக்கு தெய்வானை திருக்கல்யாண உற்சவமும், பொன்மயில் வாகனத்தில் சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், அறங்காவலர் குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்திருந்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu