தார்சாலை வசதியின்றி தவிக்கும் ஏரி மலை கிராம மக்கள்
மலைகிராமத்திற்கு செல்லும் மண்சாலை
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த வட்ட வனஹள்ளி ஊராட்சியில் ஏரிமலை, கோட்டூர் மலை, அலகட்டு மலை கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள மக்களுக்கு வாழ்வாதாரம் விவசாயம், கால்நடை வளர்ப்பு நில மற்ற மலைவாழ் மக்கள் பெங்களூரு, ஓசூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று கட்டிட வேலைகள் உள்ளிட்ட பல்வேறு பணி களை செய்து வருகின்றனர்.
பல தலைமுறைகளாக மலை கிராமத்தில் வாழ்ந்து வருவதால் இந்த மூன்று கிராம மக்களும் உயர்கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு மலையை விட்டு கீழே இறங்கி வருவதற்கு சாலை வசதி கேட்டு அவதிப்பட்டு வருகின்றனர். இந்த மக்களுக்கு சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் ஏற்படுத்தி தர முடியாமல் அரசு இருந்து வருகிறது.
இந்நிலையில் கிராம மக்களே ஒன்றிணைந்து மண் சாலை அமைத்து, சாலையை பயன்படுத்தி வந்துள்ளனர்.
ஆனால் மழை வருகின்ற பொழுது இந்த மண் சாலை முழுவதுமாக மண் அரிப்பு ஏற்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறது. இதனால் வனத்துறை சாலை அமைக்க அனுமதி கொடுத்தால், மத்திய, மாநில அரசுகள் சாலை வசதி செய்து தர முடியும். இதனால் கிராம மக்கள் பல்வேறு இடங்களில் மனு கொடுத்தும், பல ஆண்டுகளாக போராடியும் வருகின்றனர்.
இந்நிலையில் தர்மபுரி மாவட்ட வனத் துறை சார்பில் விவசாயிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம், முறையாக நடைபெறும் என தெரிவித்த வன அலுவலர் அப்பல்லோ நாயுடு தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஏரிமலை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதிக்கு தார் சாலை அமைப்பதற்கு வனத் துறை அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை வைத்தும் இதுவரை வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என கவலை தெரிவித்தனர்.
ஏரிமலையில் 65 க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் மற்றும் மற்ற இனத்தவர்கள் சேர்ந்து 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அடிப்படை வசதிகள் கேட்டு ஓய்ந்து போய் குழந்தைகளின் கல்விக்காகவும் அடிப்படை தேவைகளுக்காகவும் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்த மலை கிராமத்தை விட்டு விட்டு நகரங்களை நோக்கி சென்று விட்ட னர். எஞ்சியுள்ள 150 குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர்.
மலை கிராம குழந்தைக ளுக்காக இங்கு அங்கன்வாடி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 15 குழந்தைகள் உள்ளனர். ஒரு ஆசிரியர் உள்ளார். மேலும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 26 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். 3 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
மேலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயில்வதற்கு மலை கிராமத்தை விட்டு மலையடிவாரத்தில் உள்ள சீங்காடு, மற்றும் திருமல்வாடி, பாலக்கோடு பகுதியில் உள்ள பள்ளிக்கு செல்ல வேண்டும் தினமும் பள்ளிக்குச் சென்று வர வனப்பகுதியை கடந்து செல்லும்போது வனவிலங்குகளின் அச்சுறுத்தல் உள்ளது.
தினமும் 4 கிலோ மீட்டர் மலை ஏறி இறங்க வேண்டும் இதுபோன்ற இன்னல்களால் உயர்கல்வியை தொடர முடியாமல் மாணவிகள் 10-ம் வகுப்போடு பள்ளிப் படிப்பை முடிப்பதால் உயர்கல்வி என்பது மலைகிராம மாணவர்களுக்கு கேள்விக்குறியாக உள்ளது.
மேலும் அந்த மலை கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக பொருட்களை வாங்க கீழே தான் சென்று வர வேண்டும்.
நாடு சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆன நிலையிலும் தங்களது கிராமத்திற்கு சாலை வசதி இல்லாது இருப்பதால், உடல்நிலை சரியில்லாத நேரங்களிலும், கர்ப்பிணி பெண்களை பிரசவ காலத்தில் தூளி கட்டி எடுத்து செல்லும் போதும் பாதை இல்லாததால் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
பாம்பு உள்ளிட்ட விஷ கடியில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல காலதாமதம் ஏற்படுவதாலும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. மழைக்காலங்களில் பாதை சறுக்குவதால் பொதுமக்கள் சிலர் விழுந்தும் காயங்கள் ஏற்பட்டுள்ளது.
மலைவாழ் மக்களின் அடிப்படை தேவையான சாலை வசதியை அமைத்துக் கொடுத்தால் அப்பகுதி மக்கள் இந்திய குடிமகன்களாக தலை நிமிர்ந்து நிற்போம் என தலைமுறைகளோடு 77 ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
எனவே ஏரிமலை முதல் சீங்காடு வரை தார் சாலை அமைக்க வனத்துறை அனுமதி அளிக்க வேண்டும் என மலை கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu