அரூர் அருகே வழிதடபிரச்சனை; டேங்க் மீது ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்
மேல் நிலை நீர்தேக்க தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயி.
தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த நாச்சினாம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் முருகன் . இவருக்கு சொந்தமாக 6 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அவரது சகோதரர்கள் குணசேகரன், பழனி ஆகிய மூவருக்கும் கடந்த 20 வருடமாக விவசாய நிலத்தில் வழித்தட பிரச்சனைகள் உள்ளது.
இந்த நில பிரச்சனைகள் குறித்து பலமுறை இவர்களுக்கு தகராறு ஏற்பட்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் காவல்துறை, வருவாய்த்துறை இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் மனமுடைந்த முருகன், இன்று நாச்சினாம்பட்டி பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது அவருடைய நிலத்தின் பத்திர பதிவு நகல், ஆயில் கேனுடன், தற்கொலை செய்து கொள்வதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து சுமார் 3 மணி நேரமாக மேல்நிலை நீர்தேக்க தொட்டி மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த தகவலறிந்து வந்த காவல்துறையினர், தீயணைப்பு மீட்பு துறை மற்றும் வருவாய்த் துறையினர் முருகனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவருடைய கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். தொடர்ந்து அரூர் தீயணைப்புத் துறையினர் முருகனை பாதுகாப்பாக மீட்டனர்.
இதனைத்தொடர்ந்து, இது குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் தங்கள் குடும்பத்துடன் தீ வைத்து தற்கொலை செய்துகொள்வதாக முருகன் தெரிவித்தார். நிலத்திற்கு வழி கேட்டு விவசாயி நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu