பட்டாக்கத்திகளுடன் காரில் சுற்றிய கும்பல்: 3 பேர் கைது; 3 பேர் தப்பி ஓட்டம்
கைது செய்யப்பட்ட கும்பல்.
தருமபுரி மாவட்டம், அரூர்- மொரப்பூர் ரோட்டில் எட்டிப்பட்டி பகுதியில் தனிப்படை காவலர்கள் பழனிசாமி, ஆனந்தன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் தவறான நடத்தை ,பழைய குற்றவாளிகள் பற்றி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்நிலையில், தண்டகுப்பம் பகுதியில் கர்நாடக பதிவெண் கொண்ட ஸ்கார்பியோ காருடன் 6 பேர் கொண்ட கும்பல் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்துள்ளனர். இதனை கண்ட தனிப்படை காவலர்கள் அவர்களை விசாரணை செய்துள்ளனர். அப்போது தாங்கள் பெங்களூரிலிருந்து வருவதாகவும், பொய்யப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் சிலரின் முகத்தை பார்த்த தனிப்படை காவல் துறையினர், சந்தேகமடைந்து காரை சோதனை செய்துள்ளனர். அப்போது காரில் பெரிய அறிவாள், பட்டா கத்தி, கசாப் கத்தி, 3 பட்டன் கத்திகள் மற்றும் 1.200 கிராம் கஞ்சா வைத்திருந்துள்ளனர். இதனை தனிப்படை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஆனால் காவல் துறையினர் சோதனை செய்துகொண்டிருக்கும்போதே மூன்று பேர் தப்பி ஓடிவிட்டனர். இதனைத்தொடர்ந்து 3 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தனிப்படை காவலர்கள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், காரில் வந்த கும்பல் பெங்களூரை சேர்ந்த நயீன்பாஷா, இன்ரான்கான், சையத்நவாஸ், சையத்அயாஸ், அப்சல்பாஷா, நவாஸ்பாஷா ஆகிய ஆறு பேரும் பெங்களூரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து பெங்களூரிலிருந்து என்ன காரணத்திற்காக வந்தார்கள்? ஏதேனும் சதி திட்டம் போட்டு வந்தார்களா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து நயீன்பாஷா, இம்ரான்கான், சையத்நவாஸ் ஆகிய மூவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இதில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாததால், தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர்களிடமிருந்து 6 கத்திகள், கஞ்சா மற்றும் ஸ்காரிபியோ காரினை பறிமுதல் செய்தனர். இதில் நயீன்பாஷா என்பவர் பெங்களூரில் ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.
மேலும் சந்தேகத்திற்கிடமான முறையில் காரில் கத்தியுடன் வந்திருந்ததால், ஏதேனும் சதித் திட்டம் தீட்டி கொண்டு வந்தார்களா? அல்லது ஏதேனும் குற்ற சம்பவங்களை செய்துவிட்டு தலைமறைவாக பதுங்குவதற்காக இந்த பகுதிக்கு வந்தார்களா என காவல் துறையினர் விசாரணை தொடங்கியுள்ளனர்.
தப்பி ஓடிய மூவரின் விவரங்களை சேகரித்த போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அரூரில் 6 பேர் கொண்ட கும்பல் காரில் கத்தியுடன் வந்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu