உழவு பணிக்கு வழங்கப்படும் வாடகை டிராக்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை
மாதிரி படம்
தர்மபுரி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி உதவி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்குஉதவி ஆட்சியர் கீதாராணி தலைமை தாங்கினார். துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம் ஆகிய 5 தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
வேளாண் பொறியியல் துறை சார்பில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் டிராக்டர் விவசாயிகளுக்கு வாடகைக்கு விடப்படுகிறது. உழவு பணி மற்றும் சாகுபடி பணி ஆகியவற்றிற்காக டிராக்டர் தேவை கூடுதலாக இருப்பதால் வாடகை டிராக்டர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.பல்வேறு ஏரிகளில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். ஏரிக்கரை ஓரங்களில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.
இதேபோல் அரூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அரூர் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு உதவி ஆட்சியர் வில்சன் ராஜசேகர் தலைமை தாங்கினார். துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
காட்டு எருமைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர் சேதத்தை ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாய விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பீணியாற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்த கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியர் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu