அர்ப்பணிப்பின் மறுபெயர் செவிலியர் சுகந்தி

அர்ப்பணிப்பின் மறுபெயர் செவிலியர் சுகந்தி
X

செவிலியர் சுகந்தி.

இந்திய குடியரசுத்தலைவரிடம் விருதுநகரை சேர்ந்த செவிலியர் சுகந்தி சிறந்த சேவைக்கான விருது பெற்றுள்ளார்.

புது டெல்லியில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த சேவைக்கான பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 30 பேருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவால் வழங்கப்பட்டது. இவ்விருதுடன் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. தமிழகத்திலிருந்து இவ்விருதுபெற்ற ஒரே செவிலியர் என்ற பெருமையை விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சுகந்தி (49) பெற்றுள்ளார்.

இதுகுறித்து செவிலியர் சுகந்தி கூறியதாவது: நான் பணிபுரியும் அரசு ஆரம்ப சுகாதார நிலயத்துக்குட்பட்ட பெருமாள் தேவன்பட்டியில் கிராம சுகாதார செவிலியராக உள்ளேன். இக்கிராமத்தில் உள்ள பெரும்பாலான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். அதனால் ராணுவ கிராமம் என அழைக்கப்படுகிறது. அவர்களின் குடும்பங்களுக்கு சேவைபுரிவதில் பெருமைப்படுகிறேன்.

இக்கிராமத்தில் உள்ள கர்ப்பிணிகள், குழந்தைகளை தொடர்ந்து கண்காணித்து அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வருகிறேன். இப்பகுதியில் நரிக்குறவர்கள் இனத்தைச் சேர்ந்த பலர் உள்ளனர். தொடர்ந்து பல நாட்கள் ஒரே இடத்தில் இவர்கள் இருப்பதில்லை. ஆனாலும், அவர்களை பற்றிய அனைத்து விவரங்களையும் சேகரித்து தொடர்ந்து அவர்களை கண்காணித்து மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறேன்.

அதுமட்டுமின்றி, மலைவாழ் மக்களும் அதிக அளவில் வசிக்கின்றனர். அவர்களுக்கும் அவர்களது குழந்தைகளும் எனது கண்காணிப்பில் உள்ளனர். ஒரு பெண் கர்ப்பமான 45-வது நாள் முதல் குழந்தை பெற்றெடுக்கும் வரை அவர்களுக்கு தடுப்பூசி, மருந்து, மாத்திரைகளை விடுபடாமல் கண்காணித்து வழங்குவது, குழந்தை பிறந்த பின்னரும் குழந்தையின் எடை, உயரம், ஆரோக்கியத்தை தொடர்ந்து கண்காணிப்பது எனது முக்கிய பணியாக இருந்து வருகிறது. எனது 27 ஆண்டுகால பணியில், எனது தொடர் கண்காணிப்பால் பிரசவத்தின் போது இறப்பு என்பது ஒன்றுகூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு, கொரோனா காலத்திலும் கூட கர்ப்பிணிகளை ஆட்டோ வைத்து மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்துள்ளேன். 25 குடும்பங்களுக்கு தேவையான அரிசி வாங்கிக் கொடுத்து வந்தேன். இதற்கு எனது கணவர் மிகுந்த உறுதுணையாக இருந்தார். மேலும், அவசர காலங்களில் விருதுநகர், திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கர்ப்பிணி கள் அனுப்பிவைக்கப்பட்டால் அவர்களுடனே நானும் செல்வேன். நல்லபடியாக குழந்தை பிறந்த பின்புதான் நான் ஊருக்குத் திரும்புவேன். குடியரசுத் தலைவரிடம் விருது பெற்றது நேர்மைக்கும் அர்ப்பணிப்புடன் செய்த சேவைக்கும் கிடைத்த பரிசாக கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
future ai robot technology