மூணாறு பகுதியில் உள்ள தமிழர்களை வெளியேற்ற சதி?

மூணாறு பகுதியில் உள்ள தமிழர்களை  வெளியேற்ற சதி?
X

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம்.

மூணாறு அருகே காட்டு யானைகள் சரணாலயம் அமைக்க கேரள வனத்துறை ஏற்கனவே முடிவு செய்திருந்தது.

கேரள மாநிலம் மூணாறு அருகே ஆனையிரங்கல்-சின்னக்கானல் பகுதியில் காட்டு யானைகள் சரணாலயம் அமைக்க கேரள வனத்துறையினர் ஏற்கனவே செய்திருந்த முடிவின் அடிப்படையில் தற்போது வேலைகள் தீவிரம் எடுத்திருப்பதாக தகவல்கள் வருகிறது. இதன் மூலம், இடுக்கி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக கவலையளிக்கும் இரண்டு பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என, வனத்துறை நம்புகிறது.

ஆனையிறங்கலில் சிக்கித் தவிக்கும் காட்டு யானைகளை பாதுகாக்கவும், மூணாறில் மனித-விலங்கு மோதலைத் தடுக்கவுமான இரண்டு பிரச்னைகள் இதன் மூலம் முடிவுக்கு வரலாம் என்றும் கேரள வனத்துறை நம்புகிறது.

இதற்கான அஜெண்டா கடந்த 2019 ஆம் ஆண்டே முடிவு செய்யப்பட்டு விட்டது. அன்றைக்கு முதன்மை வனவிலங்கு காப்பாளராக இருந்த சுரேந்திரகுமார், மூணாறு கோட்ட வன அதிகாரியிடம் (டிஎஃப்ஓ) முன்மொழியப்பட்ட சரணாலயம் மற்றும் சின்னக்கானல் மற்றும் ஆனையிறங்கலில் காட்டு யானைகள் தொடர்பான பிரச்னைகள் குறித்து விரிவான திட்ட அறிக்கையை கோரியிருந்தார்.

இடுக்கியில் உள்ள ஆனையிறங்கால்-சின்னக்கானல், 301 காலனி, 80 ஏக்கர் மற்றும் ஆதிவாசி காலனி போன்ற பகுதிகளில் 6 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இந்த உத்தேச சரணாலயம் அமைக்கப்படும். 301 காலனி மற்றும் ஆதிவாசி காலனியில் வசிக்கும் ஒரு சில குடும்பங்கள் வேறு இடத்துக்கு மாற்றப்படுவார்கள் என்று வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆனால் வனத்துறை அதிகாரியின் இந்த கருத்தை பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் மறுத்துள்ளது. இது குறித்து இச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் கூறியதாவது: ஒட்டுமொத்தமாக அந்தப் பகுதியில் பட்டய பூமி வைத்திருக்கும் தமிழர்களுக்கு எதிராகவே இந்த யானைகள் சரணாலயம் அமைக்கப்படுவதாக சந்தேகிக்கிறோம். ஆனையிறங்கால் பகுதியில் உள்ள 386 ஹெக்டேர் வன நிலம் ஹிந்துஸ்தான் நியூஸ்பிரிண்ட் லிமிடெட் (HNL) நிறுவனத்தால் பயன்படுத்தப்படுகிறது. இது 290 ஹெக்டேர் வனப்பகுதிக்கு கூடுதலாக உத்தேச திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் என வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த அறிவிப்பு பேச்சளவில் தான் இன்று வரை இருந்து வரும் நிலையில், சின்னக்கானல் ஆனையிறங்கால், சிங்கு கண்டம், திடீர் நகர், பி எல் ராம் உள்ளிட்ட பகுதிகளை குறி வைத்து, கேரள வனத்துறை காய் நகர்த்துவதாக தெரிகிறது. அதற்குக் காரணமும் இருக்கிறது இந்தப் பகுதிகளில் வாழ்வதெல்லாம் பட்டயம் வைத்திருக்கும் தமிழர்கள் என்பது தான். “இந்த சரணாலயம் நடைமுறைக்கு வந்தால், காட்டு யானைகளுக்கு இயற்கையான வாழ்விடமாக இது அமையும். இது அவர்களின் சுமூகமான இயக்கத்தையும் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும்” என்று கேரளா வனத்துறை கதை விட்டாலும் அந்த கதையை நம்புவதற்கு நாங்கள் தயாராக இல்லை.

2002-2003ல் கேரளாவில் ஏ.கே.அந்தோணி தலைமையிலான முன்னாள் காங்கிரஸ் அரசு மூணாறு அருகே சிங்குகண்டம், 301 காலனி மற்றும் 80 ஏக்கர் பகுதிகளில் மனித குடியிருப்புகளை ஒதுக்கியது என்று புதிய புரளியை கிளப்பிய கேரள வனத்துறை, அதனாலேயே யானை வழித்தடங்கள் அடைபட்டதாகவும், 38 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஆனையிறங்கால் அணை நீர்பிடிப்பு பகுதியில் கரை ஒதுங்கியதாகவும் உளறிக்கொட்டி வருகிறது . இதனால் ஆனையிறங்கால், மூணாறு, சின்னக்கானல், சிங்குகண்டம் மற்றும் 301 காலனி பகுதிகளில் யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக கூறும் இவர்கள் ஏன் 2000 க்கு முன்பு அங்கு யானைகள் தொல்லை இல்லை என்பதை கூற மறுக்கிறார்கள்.

மூணாறு வனவிலங்கு பிரிவில் 2010 முதல், காட்டு யானை தாக்குதலுக்கு 28 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது உண்மைதான். 2018 ஆம் ஆண்டு காட்டு யானை தாக்கி நான்கு பேர் உயிரிழந்தனர். மே 16, 2018 அன்று, ஆனையிறங்கால் அருகே உள்ள புதுப்பாறையில், மூலத்தாரைச் சேர்ந்த ஏலக்காய் தோட்டக் காவலாளி வேலு (55) காட்டு யானையால் மிதிபட்டு இறந்தார். ஜூலை 4 ஆம் தேதி ஆனையிறங்கால் அருகே சிங்குகண்டத்தில் காட்டு யானை தாக்கியதில் பழங்குடியின விவசாயி தங்கச்சன் (55) உயிரிழந்தார்.

கடந்த ஜூலை 11 ம் தேதி சின்னக்கானல் அருகே உள்ள ராஜாப்பாறையில் ஏலக்காய் தோட்ட மேற்பார்வையாளர் குமார் (46) காட்டு யானையால் மிதித்து உயிரிழந்தார். செப்டம்பர் 20 ஆம் தேதி புதுப்பாறையில் ஏலக்காய் தோட்டக் காவலாளி முத்தையா (65) என்பவரை காட்டு யானை மிதித்து கொன்றது. இப்படி பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஆனால் இதில் பாதிக்கப்பட்டது என்பதோ பெரும்பாலும் தமிழர்கள் தான்.

2018 நவம்பரில், மூணாறு டிஎஃப்ஓ நரேந்திர பாபு, தலைமை வனவிலங்கு காப்பாளரிடம் விரிவான முன்மொழிவை சமர்ப்பித்திருந்தார். அதில் யானைத் தாக்குதலைத் தடுக்க சின்னக்கானல் மற்றும் மூணாறு பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களை அரசாங்கம் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.


கடந்த 2018 டிசம்பரில், மாநிலத்தில் உள்ள வன எல்லைப் பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களை வேறு இடத்திற்கு மாற்ற, மாநில அரசு ரூ.49.70 கோடி ஒதுக்கியது, ஒவ்வொரு குடும்பத்திற்கும் இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டதாக வனத்துறை கூறி வருகிறது. இது தமிழர்களை குறி வைத்த அறிவிப்பு என்பது நமக்குத் தெரியாமல் இல்லை. இருப்பினும், இடமாற்றம் செயல்முறை இன்னும் வனத்துறையின் பரிசீலனையில் உள்ளது, என்று கூறுகிறார் நரேந்திர பாபு.

காட்டு யானைகளின் தாக்குதலுக்கு வாழ்விட அழிவே முக்கிய காரணம் என்று கூறும் கேரள வனத்துறை., 301 காலனி மற்றும் சிங்குகண்டம் பகுதிகளில் மனித-காட்டு யானை மோதலை தடுக்க இடமாற்றம் மட்டுமே ஒரே வழி என்று தொடர்ந்து கூறி வருகிறது. கேரள மாநில விலங்குகள் நல வாரியத்தின் உறுப்பினரான சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்.என்.ஜெயச்சந்திரன் கூறுகையில், “இந்த சரணாலயம் காட்டு யானைகள் மட்டுமின்றி இப்பகுதியில் உள்ள மற்ற வன விலங்குகளுக்கும் இயற்கையான வாழ்விடத்தை வழங்கும். ஆனால் சரணாலயம் வருவதற்கு முன், வனத்துறையினர் இந்த பகுதிகளில் உள்ள குடும்பங்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார்.

அப்படி ஒரு சூழல் உருவானால் கேரளாவில் வாழும் தமிழர்களுக்கு ஆதரவாக பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் துணை நிற்கும். ஏற்கெனவே திருப்பூர் மாவட்டத்தில் இருந்து மூணாறு நோக்கி தமிழர்கள் எவரும் நகர்ந்து விடக்கூடாது என்பதற்காக சின்னாறு வனவிலங்கு சரணாலயத்தை அமைத்ததோடு, மறையூர் அருகே மூணாறு எஸ்டேட்டில் ஓய்வு பெற்ற தமிழ் தோட்ட தொழிலாளர்கள் வந்து குடியேறுவதை தடுக்க அங்கே நீலக்குறிஞ்சி சரணாலயம் அமைத்தனர்.

கொடைக்கானல் கிளாவரை பகுதியில் இருந்து கொட்டக்கம்பூர் வட்டவடை கோயிலூரை நோக்கி தமிழர்கள் நகர்ந்து விடுவார்கள் என்பதற்காக, அங்கே பாம்பாடுஞ்சோலை தேசிய பூங்காவை அமைத்தார்கள்... அதுபோல பூப்பாறை சாந்தம்பாறை பகுதிகளில் தமிழர் இடப்பெயர்வை தடுப்பதற்காக அங்கே மதிகெட்டான்சோலை தேசிய பூங்காவை அமைத்தார்கள். இப்படியாக இப்போது சின்னக்கானலில் வந்து நிற்கிறார்கள்.

600 ஆண்டுகளாக சின்னக்கானல் பஞ்சாயத்து பூமி நாங்கள் வாழ்ந்து வரும் பூமி. இங்கே யாரும் எங்களை அவ்வளவு எளிதில் வெளியேற்றி விட முடியாது. வெளியேற்ற நினைத்தால் தேவிகுளம் பீர்மேடு உடுமஞ்சோலை ஆகிய மூன்று தாலுகாக்களையும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று களத்தில் இறங்குவோம். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags

Next Story