சந்தையில் பட்ட கஷ்டம்..! சந்தை தொழிலாளர்களுக்கு அன்னமிடும் கை..!

ஒரு வேளை உணவுக்கு கஷ்டப்பட்ட, படிப்பறிவு இல்லாத சாதாரண கூலித்தொழிலாளி ஒருவர் மெட்ரிகுலேசன் பள்ளி நடத்தி வருகிறார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
சந்தையில் பட்ட கஷ்டம்..! சந்தை  தொழிலாளர்களுக்கு அன்னமிடும் கை..!
X

மெட்ரிக் பள்ளி நடத்தும் காய்கறி வியாபாரி ராஜேந்திரன்.

இப்படி ஒருவரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா. இதுவரை கேள்விப்படவில்லை என்றால் அப்படிப்பட்டவர்தான் உழைப்பின் நாயகன் ராஜேந்திரன். எஸ் எம் டிரேடர்ஸ் என்ற பெயரில் நாகர்கோவிலில் காய்கறிகள் வியாபார நிறுவனம் நடத்தி வருகிறார். ஒரு சாதாரண காய்கறி வியாபாரி போல் தோற்றமளித்த அவரை அந்தக் கடையின் உரிமையாளர் என்றே நம்மால் நம்ப முடியவில்லை. காரணம் அவ்வளவு எளிமையான தோற்றம். பல லட்சங்களை சிந்தி வியாபாரம் செய்யும் நிறுவனத்தின் உரிமையாளரா? என்று வியக்க வைத்தார். அவர் கூறிய தகவல்கள் மேலும், மேலும் ஆச்சர்யப்படுத்தியது.

என் பெயர் ராஜேந்திரன். எனது சொந்த ஊர் மயிலாடி. ஒண்ணாம் வகுப்பு தான் படிச்சிருக்கேன். அங்கு மெட்ரிக் பள்ளி ஒன்று நடத்திக்கிட்டு இருக்கேன். உழைப்பு உழைப்பு, உழைப்பு என்று தான் வளர்ந்தேன். இன்னைக்கு கடவுள் புண்ணியத்தால் நல்லா இருக்கேன் என்றார்.

அவரது பேச்சில் இருந்து இது அவ்வளவு சாதாரண உழைப்பின் பின்னணியில் உருவாகிய வளர்ச்சியாக இருக்காது என்பதை உணர்த்தியது. தொடர்ந்து பேசினோம்.

ராத்திரி பகல் பாக்காம 24 மணி நேரமும் உழைச்சேன். 1960ல் வடசேரி கனகமூலம் சந்தையில் ஒரு கிலோ மிளகாய் வாங்கி கூறு வச்சி வியாபாரத்தை துவங்கினேன். கிடைச்ச வேலையெல்லாம் செஞ்சேன். செங்கல் அறுக்க போவேன். செம்மண் சுமக்க போவேன். ராத்திரி ஆனா சூடு அடிக்க மாடு கொண்டு போவேன். மாடு சூடில் சுத்திக்கிட்டு இருக்கும், எனக்கு கண்ண கிறக்கி உறக்கம் வந்துரும். சூடு அடிக்கிற கூறுவடி மாட்டு சாணிய வாயில தேய்ச்சி எழுப்புவான். விடிய விடிய மாட்டுக்குப் பின்னால சுத்திகிட்டே இருப்பேன்.

விடிஞ்சதும் வைக்கோல் கட்டுவது, தார் அறுக்க போவதுன்னு அடுத்த நாள் வேலை தொடங்கிடும். நான் வளர்ந்தது பூராவும் வடசேரி சந்தையில தான். இந்த வியாபாரம் தான் கொஞ்சம் கொஞ்சமா என்ன வளர்த்தது. என்று அவர் இளமைக் காலத்தை சொல்லி முடித்தார். நான் படிக்கல, படிக்கிற வாய்ப்பும் கிடைக்கல. அதனால் தான் கொஞ்சம் காசு வந்ததும் எங்க ஊரிலேயே ஒரு பள்ளிக்கூடத்தை திறந்தேன் என்று அவருக்குள் இருந்த கல்வி குறித்த ஏக்கத்தை வெளிப்படுத்தினார்.

"படித்தவன் பாடம் நடத்துகிறான்; படிக்காதவன். பள்ளிக்கூடம் நடத்துகிறான் " என்ற சொலவடைக்குப் பொருத்தமாக இருந்தது இவரது வாழ்க்கை. கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் எஸ் எம் அண்ணாச்சிக்கு சொந்தமான எஸ் எம் மெட்ரிக் ஸ்கூல் செயல்பட்டு வருகிறது. எல் கே ஜி முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை நடைபெற்று வரும் எஸ் எம் மெட்ரிக் பள்ளியில் " 135 ஆசிரியர்களும், சுமார் 1500 மாணவ மாணவிகளும் இருக்கிறார்கள். தென்னிந்தியாவின் முக்கிய காய்கறி சந்தைகளில் எஸ் எம் அண்ணாச்சி நேரடியாக பொருட்களை கொள்முதல் செய்கிறார். வாங்கிய பொருட்களை வடசேரி சந்தைக்கு கொண்டுவர வாடகை லாரிகளை பயன்படுத்தி வந்தார். பின்னர் எஸ் எம் லாரி சர்வீஸ் என்ற பெயரில் பார்சல் நிறுவனம் ஒன்றையும் துவங்கினார். தற்போது எஸ் எம் காய்கறிக் கடை, எஸ் எம் மெட்ரிக் பள்ளி, எஸ் எம் லாரி சர்வீஸ் என முக்கிய மூன்று தொழில்களில் ஈடுபட்டு இருக்கிறார். நாள் ஒன்றுக்கு 4 அணா வேலைக்கு போனவன், இன்னக்கி மாசம் 13 லட்சம் ரூபாய் சம்பளமா கொடுக்கிறேன். என்று எந்தவித பெருமையும் இல்லாமல் கூறியபோது ' மனம் நெகிழ்ந்து போனோம்.

இன்று நாள் தோறும் அவர் கடை இருக்கும் சந்தைக்கு 100 சாப்பாடு வருகிறது. யார் வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம். ஒருவேளை சாப்பாடு இல்லாம வடசேரி சந்தையில் கஷ்டப்பட்டேன். எந்த சந்தை தொழிலாளரும் இப்படி கஷ்டப்படக்கூடாது என்று சாப்பாடு கொண்டு வரச் சொல்கிறேன். என்று தன் இளமைக்காலத்தை நினைவுபடுத்துகிறார். அண்ணாச்சிக்கு கல்வி மீது மிகுந்த ஆர்வம் இருக்கிறது.

காமராஜர் பற்றி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். பள்ளி அலுவலகத்தில் அவர் இருக்கைக்கு மேல் அமைச்சர் கக்கனின் புகைப்படத்தை வைத்திருக்கிறார். அவர் வளர்ச்சி மிக்க ஒரு சமூகத்தை எதிர்நோக்குகிறார் என்பது மட்டும் நமக்கு புரிந்தது. அண்ணாச்சிக்கு வயசு என்ன ஆச்சு என்று கேட்டோம். 70 இருக்கும் சார் என்றார். இவ்வளவு சம்பாத்தியத்திற்கு பிறகும், இவ்வளவு வளர்ச்சிக்குப் பிறகும், இன்றும் காலை முதல் இரவு வரை சந்தைக்கு வருகிறார். தொழிலாளிகளோடு தொழிலாளியாக, காய்கறிகளை புரட்டுகிறார். அவருக்கு வயது தெரிந்திருக்க நியாயம் இல்லை. காரணம் கால நேரம் தெரியாமல் இன்றும் உழைக்கும் எஸ் எம் ராஜேந்திரன் உழைப்பின் நாயகன் தான்.

Updated On: 20 May 2023 8:10 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நோய் வராமல் தடுக்க கொசு மருந்து அடிக்கும் பணி...
  2. ஈரோடு
    கோபி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 80 வயது முதியவர் கைது
  3. சென்னை
    வெள்ளத்தில் சிக்கிய தந்தையை தேடி சென்ற மகன் உயிரிழப்பு: இது சென்னை...
  4. விளையாட்டு
    அலங்காநல்லூரில் கிரிக்கெட் ஸ்டேடியம் போல் ரூ.44 கோடியில் ஜல்லிக்கட்டு...
  5. நீலகிரி
    குன்னூர் அருகே மலைச்சரிவில் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட காட்டெருமைகள்
  6. கரூர்
    கரூரில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட வெள்ள நிவாரண பொருட்கள்
  7. தர்மபுரி
    tதர்மபுரி அருகே குடிநீர்கேட்டு இரண்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
  8. கோயம்புத்தூர்
    புயல் பாதிப்பு: கோவையில் இருந்து சென்னைக்கு 1 டன் காய்கறி, 1.5 டன்...
  9. பல்லடம்
    பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த பல்லடம் மின்வாரியம்...
  10. இந்தியா
    எய்ம்ஸ் கண்டறிந்த பாக்டீரியா சீன நிமோனியாவுடன் தொடர்பு: மத்திய அரசு...