மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் பெண் காவலர்கள்: தமிழகத்தில் முதல்முறை
காவல்துறை மோப்பநாய் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள பெண் காவலர்கள் கவிப்பிரியா மற்றும் பவானி
கோவை மாநகர காவல்துறையில் துப்பறியும் மோப்பநாய் பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது 7 மோப்ப நாய்கள் உள்ளன.
போதை பொருட்களை கண்டறிவதற்காக புதிதாக பெல்ஜியம் மெலானாய்டு வகையை சேர்ந்த மதனா என பெயரிடப்பட்ட 8 மாதமே ஆன மோப்ப நாய் சேர்க்கப்பட்டு தற்போது 8 மோப்பநாய்கள் உள்ளன.
இதுதவிர திண்டுக்கல், பாளையங்கோட்டை மத்திய சிறை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10 மோப்ப நாய்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அம்பலவாணன் தலைமையில் இந்த பிரிவு இயங்குகிறது. இங்கு உள்ள காவல்துறை மோப்ப நாய் பயிற்சி பிரிவில் கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை ஆண் காவலர்கள் மட்டுமே மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கோவை மோப்ப நாய் பிரிவில் நாய்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஆயுதப்படை பிரிவில் பணியாற்றிய திருப்பூரை சேர்ந்த கவிப்பிரியா (வயது25), தேனியை சேர்ந்த பவானி(26) ஆகிய 2 பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் வில்மா என்ற பெயர்கொண்ட லேப்ரடார் வகை நாய், பெல்ஜியம் மெலானாய்டு நாய் உள்ளிட்ட மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள்.
இதற்கிடையே மோப்ப நாய் பிரிவில் நியமிக்கப்பட்ட பெண் காவலர்கள் எவ்வாறு பயிற்சி அளிக்கிறார்கள் என்பதை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து பெண் காவலர்கள் கவிப்பிரியா, பவானி ஆகியோர் கூறுகையில்,
நாங்கள் கடந்த 2022-ம் ஆண்டு கோவை மாநகர ஆயுதப்படை பிரிவில் பணியில் சேர்ந்தோம். நாங்கள் ஏற்கனவே வீடுகளில் நாய்களை வளர்த்து வருகிறோம். இதனால் எங்களுக்கு நாய்கள் மீது அலாதி பிரியம் உண்டு.
நாய்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட நாங்களும் மோப்ப நாய் பிரிவில் சேர்ந்து பணியாற்ற விரும்பினோம். அப்போது தான் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மோப்ப நாய் பிரிவில் சேர பெண் காவலர்களுக்கு ஆர்வம் உள்ளதா? என கேட்டிருந்தார்.
இதையடுத்து நாங்கள் எங்களின் ஆர்வத்தை கூறவே, எங்களை தற்போது மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்க நியமித்துள்ளனர். மோப்ப நாய் பிரிவில் சேர்ந்து நாய்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற எங்களுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறியது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu