ஓடும் பேருந்தில் நகை பறித்த பெண் கைது

ஓடும் பேருந்தில் நகை பறித்த பெண் கைது
X

ஓடும் பேருந்தில் நகை பறிப்பில் கைதான சத்யா

எந்த கோவிலிளில் எப்போது திருவிழா வருகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு நகைபறிப்பில் ஈடுபட்ட திண்டுக்கல் பெண் கைது

கோவை துடியலூர் அருகே உள்ள டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் பெருமாள் பிரபு. இவரது மனைவி சந்திர பிரபா (வயது35). இவர் தனது சகோதரியுடன் பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.

பூ மார்க்கெட் பேருந்து நிறுத்ததில் இறங்க முயன்றபோது கூட்ட நெரிசலை பயன்படுத்தி இளம் பெண் ஒருவர் அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றார். இதில் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார்.

உடனே அங்கிருந்தவர்கள் அந்த இளம்பெண்ணை மடக்கி பிடித்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் செயின் பறித்த இளம் பெண் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டியை சேர்ந்த வடிவேல் என்பவரின் மனைவி சத்யா (32) என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரிய வந்தது. அதில், சத்யா மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழகத்தில் உள்ள கோவில்களில் எந்த நாளில், எந்த தேதியில் திருவிழா வருகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, அதன்படி, அங்கு சென்று கூட்டத்தை பயன்படுத்தி செயின் பறிப்பில் ஈடுபடலாம் என முன் கூட்டியே திட்டம் வகுத்து வைத்துள்ளனர்.

அதன்படி சத்யா திருவண்ணாமலை, பழனி, திருப்பதி, கோவை உள்பட பல்வேறு கோவில்களில் நடந்த திருவிழாக்களில் அந்தந்த ஊருக்கு சென்று நோட்டமிட்டு பக்தரைப் போல் வேஷமிட்டு நகை பணத்தை பறித்து சென்றதும் தெரிய வந்தது. இதில் கிடைக்கும் பணத்தை கொண்டு தங்களது சொந்த ஊரில் ஆடம்பர பங்களா கட்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

இன்னும் சில நாளில் கோவை கோனியம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. அதனை அறிந்து நகை மற்றும் பொருட்களை திருடி செல்ல சத்யா முன்கூட்டியே கோவை வந்து திருட்டில் ஈடுபட்ட போது சிக்கியது தெரிய வந்தது.

இது குறித்து ஆர் எஸ் புரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட சத்யாவுடன் தொடர்பில் உள்ள நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil