கோவை சரகத்தில் கடந்த ஆண்டைவிட குற்றங்கள் குறைவு.. மேற்கு மண்டல ஐஜி சுதாகர் பேட்டி…

கோவை சரகத்தில் கடந்த ஆண்டைவிட குற்றங்கள் குறைவு.. மேற்கு மண்டல ஐஜி சுதாகர் பேட்டி…
X

மேற்கு மண்டல ஐஜி சுதாகர். (கோப்பு படம்).

கோவை சரகத்தில் கடந்த ஆண்டை விட குற்றங்கள் குறைந்துள்ளன என்று காவல் துறை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தெரிவித்தார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் கோவை சரக உயர் காவல் அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், 8 கூடுதல் கண்காணிப்பாளர்கள், 27 துணை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு காவல் துறை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவை சரகத்தில் கடந்த ஆண்டில் 142 கொலை வழக்குகள் பதிவாகின. நடப்பு ஆண்டில் இதுவரை 91 கொலை வழக்குகள் தான் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். அதே சமயம் கடந்த ஆண்டு காட்டிலும் ஆதாய கொலைகள் குறைந்துள்ளன. சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு வழிப்பறி செய்தல் வெகுவாக குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு 78 வழப்பறி வழக்குகளும், இந்த ஆண்டு இதுவரை 52 வழிப்பறி வழக்குகளுக்கும் பதிவாயிருக்கின்றன. அது மட்டும் இல்லாமல் குழந்தைக்கு எதிரான பாலியல் வழக்கில் சென்ற ஆண்டு 431 வழக்குகள் பதியப்பட்டிருந்தது. இந்த ஆண்டு 529 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

போக்சோ வழக்கில் 17 வழக்குகளில் தண்டனை கடந்த ஆண்டில் பெறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் 87 வழக்குகளில் தண்டனை பெறப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு குண்டர் சட்டத்தில் 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடப்பு ஆண்டில் 155 பேர் குண்டர் சட்டத்திலும் மூன்று பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மண்டலத்தில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா ஒழிப்பு, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வுகள் அதிகமாக நடைபெற்றுள்ளன. கோவை சரகத்தில் 1211 கிராமங்கள் கஞ்சா பழக்கம் உள்ள கிராமங்களாக கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து 721 கிராமங்களில் கஞ்சா அறவே ஒழிக்கப்பட்டுள்ளன. இதனால் 60 சதவீத கஞ்சா ஒழிப்பு பணி நிறைவேறி உள்ளது.

மேலும், மேற்கு மண்டலத்தில் 47 ஆயிரம் கிலோ குட்கா பொருட்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பல்வேறு வகையில் நடைபெற்றுள்ளன. காவல்துறையுடன் இணைந்து பல்வேறு தன்னார்வத் தொண்டு அமைப்பினரும் விழிப்புணர்வு பணியாற்றி உள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் தொண்டு நிறுவனம் சார்பாக காவலர்களுக்கு ரத்த அழுத்தம் பார்க்கும் கருவி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. அவர்களுடைய உடல் ஆரோக்கியத்தை கணக்கில் கொண்டு தினமும் அதை பரிசோதனை செய்து ஒரு புத்தகத்தில் எழுதிக்கொண்டு மருத்துவரை சந்திப்பதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது என ஐஜி சுதாகர் தெரிவித்தார்.

Tags

Next Story