ஒரு அடியாக சரிந்த சிறுவாணியின் நீர் மட்டம்: தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்
சிறுவாணி அணை - கோப்புப்படம்
கோவை மாநகராட்சி மேற்கு பகுதி மற்றும் வழியோர கிராம மக்களுக்கு, மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், கேரள வனப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுவாணி அணையே குடிநீர் ஆதாரம். இதன் மொத்த உயரம் 50 அடி. கேரள அரசுடன் செய்துள்ள ஒப்பந்தப்படி, நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கலாம். கேரள அரசின் கட்டுப்பாடு காரணமாக, 45 அடிக்கே தண்ணீர் தேக்கப்படுகிறது. இதன் காரணமாக, கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
கோவையின் நீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை நீர் மட்டம், ஒரு அடியாக சரிந்திருக்கிறது. இதனால், கோவை மாநகராட்சியில் குடிநீர் வினியோகம் சில பகுதிகளில், 10 நாட்களாகவும்; சில பகுதிகளில், 15 நாட்களாகவும் அதிகரித்து விட்டது. பில்லுார் குழாய் இணைப்பு இல்லாத இடங்களில், 18 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வழங்கப்படுகிறது.
ஒப்பந்தப்படி, 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்க வேண்டிய இடத்தில், 3.5 கோடி லிட்டரே எடுக்கப்படுகிறது. இதில், மாநகராட்சி பகுதிகளுக்கு, 2 கோடி லிட்டர் மட்டுமேவினியோகிக்கப்படுகிறது.
நாளொன்றுக்கு, 6.5 கோடி லிட்டர் தண்ணீர் வரத்து குறைந்திருப்பதால், பொதுமக்களுக்கு போதுமான அளவு சப்ளை செய்ய முடிவதில்லை. அதனால்,. சில பகுதிகளில், 10 நாட்களுக்கு ஒருமுறை; சில பகுதிகளில், 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்கப்படுகிறது. மாற்று ஏற்பாடாக, பில்லுார் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் எடுத்து சமாளிக்கப்படுகிறது.
சிறுவாணி குடிநீர் வினியோகிக்கும் பகுதிகளுக்கு பில்லுார் குழாய் இணைப்பு வழங்காத இடங்களில், 18 நாட்களுக்கு ஒருமுறையே வழங்கப்படுகிறது. சிறுவாணி அணையில் தற்போதுள்ள நீர் இருப்பை கொண்டு, இன்னும் ஒரு வாரத்துக்கு சமாளிக்கலாம்.
அதற்குள், தென்மேற்கு பருவ மழை பெய்ய ஆரம்பித்து விடும் என்கின்ற நம்பிக்கையில், அதிகாரிகள் காத்திருக்கின்றனர். மழை பொய்த்தால், குறைந்தபட்ச கொள்ளளவுக்கு கீழுள்ள தண்ணீரை 'பம்ப்' செய்து பயன்படுத்த, கேரள நீர்ப்பாசனத்துறையினருடன் பேச அதிகாரிகள் திட்டமிட்டிருக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu