ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீரில் சிக்கிய வாகனங்கள்

ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீரில் சிக்கிய வாகனங்கள்

ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய கார்

காரமடை அருகே கண்ணார்பாளையம் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் சிக்கின.

கோவை மாவட்டம் காரமடை அருகே கண்ணார்பாளையத்தில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. கண்ணார்பாளையம், மத்தம்பாளையம் பகுதிகளை கோவை சாலையுடன் இணைக்கும் அந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்தநிலையில் காரமடை சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கியது. இதனால் கண்ணார்பாளையம் ரயில்வே சுரங்கப்பாதையில் வெள்ளம் சூழ்ந்தது. சுமார் 4 அடி வரை தண்ணீர் தேங்கி நின்றது. இதற்கிடையில் அதிகாலையில் சுரங்கப்பாதையில் வழக்கம்போல் வாகனங்கள் சென்றன. அங்கு வெள்ளம் வடியாமல் இருந்ததால், 3 கார்கள், ஒரு லாரி வெள்ளத்தில் சிக்கியது. இதனால் கார்களில் வந்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தனர். பின்னர் காரை விட்டு கீழே இறங்கி வெளியே வந்தனர்.

இந்த சம்பவத்தால் கோவை சாலையை இணைக்கும் குறுக்கு சாலையான அப்பகுதி வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, கயிறு கட்டி வெள்ளத்தில் சிக்கிய 3 கார்கள், லாரி மீட்கப்பட்டது. 3 மணி நேரத்துக்கு பின்னர் வெள்ளம் வடிந்ததால் போக்குவரத்து சீரானது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, கண்ணார்பாளையம் ரயில்வே சுரங்கப்பாதையில் மழை பெய்யும் போதெல்லாம், தண்ணீர் தேங்கி நிற்கிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஆழம் தெரியாமல் சென்று வாகனங்களுடன் சிக்கிக்கொள்கின்றனர். கடந்த 3 நாட்களாக பெய்த மழையால் வெள்ளம் தேங்கி வருகிறது. இதில் கார், இருசக்கர வாகனங்கள் சிக்கி வருகின்றன. அப்போது இன்ஜினில் தண்ணீர் புகுவதால், பழுதடைந்து நடுரோட்டில் நின்று விடுகிறது. இதனால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. எனவே, ரயில்வே சுரங்கப்பாதையில் வெள்ளம் தேங்காமல் இருக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags

Next Story