திமுக ஆட்சியை கவிழ்க்க மற்றவர்கள் சதி செய்ய வேண்டியதில்லை.. வானதி சீனிவாசன் பேட்டி
வானதி சீனிவாசன் எம்எல்ஏ. (கோப்பு படம்).
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதவாது:
கோவை மாநகராட்சியில் பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் என்ற நிலைமை உள்ளது. அதற்காக வரக்கூடிய நாட்களில் மக்கள் பிரச்னைகள் குறித்து ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.
இந்தப் பகுதியில் உள்ள தொழிலாளர்களுக்கு வடமாநிலத் தொழிலாளர்கள் திடீரென அவர்கள் ஊர்களுக்கு கிளம்பியதன் காரணமாக ஒரு பதட்டமான சூழல் உருவாகி உள்ளது பல்வேறு தொழில் நிறுவனங்கள் கடந்த இரண்டு நாட்களாக அவர்களுடைய தொழிலை தொடர முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இன்னும் பல்வேறு இடங்களில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக பல்வேறு துறைகளில் இது எதிரொலித்து வருகிறது. ஆரம்பத்திலேயே தமிழக அரசு சரியாக கையாளததால் மிகப்பெரிய பூதாகரமான ஒன்றாக மாறியிருக்கிறது. அப்போதே புலம் பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது.
இருந்தபோதிலும், தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பாஜக ஒத்துழைப்பு வழங்கும். 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளாட்சி தேர்தல் தவிர்த்து, வலுவாக தேர்தலை சந்தித்தது. நாடாளுமன்ற தேர்தலில் பெரிய அளவில் வெற்றியை ஈட்ட முடியவில்லை என்றாலும் சட்டமன்ற தேர்தலில் கணிசமான இடங்களை பிடித்து சட்டப்பேரவையில் ஆக்கபூர்வமான கூட்டணியாக செயல்படுகிறோம்.
ஒரு கட்சி கொள்கையை மற்றொரு கட்சி ஏற்க முடியாது. அதிமுக நிர்வாகிகள் மற்றும் பாஜகவில் இருந்து விலகியவர் தலைமை பற்றி சொன்ன கருத்துகளால் கட்சிக்குள் இருப்பவர்களுக்கு மன வருத்தம் உள்ளது. இதனால் உணர்ச்சிவசப்பட்டு சொல்லும் கருத்துகள் கூட்டணிக்குள் பாதிப்பை ஏற்படுத்தாது.
சில எதிர்பாராத நிகழ்வுகள் நடந்துள்ளது. இருந்தாலும் பலமான கூட்டணியாக தேர்தலை சந்திப்போம். கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு எடுக்கும். தற்போது ஏற்பட்ட மனக்காயங்களை ஆற்றும் வாய்ப்புள்ளது. அடுத்த தேர்தலில் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும்.
கட்சியில் இருந்து சில நபர்கள் செல்வது சாதாரண விஷயம். இதை கூட்டணிக்குள் பலவீனமாக்கும் முயற்சியாக பார்க்க வேண்டாம். திமுக ஆட்சியை கவிழ்க்க மற்றவர்கள் சதி செய்ய வேண்டியதில்லை. அதற்கு அவர்களே. தகுதியானவர்கள். எதிர்கட்சிகளை பார்த்து முதலமைச்சர் பயப்பட வேண்டாம். அமைச்சர்கள், குடும்பத்தை பார்த்து தான் அவர் பயப்பட வேண்டும்.
அண்ணாமலையின் தைரியமான பேச்சு, வேகமான செயல்பாடு என்னை ஈர்க்கக்கூடியது. ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரோடு தன்னை ஒப்பிட்டது, தலைமை பண்பை வெளிப்படுத்தும் வகையில் தான். அதை திரித்து அவர்களின் பர்சனாலிட்டி உடன் ஒப்பிடுவது தவறு.
கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் செயல்பாடுகளில் மாற்று கருத்து இருந்தாலும், அவர்களின் ஆளுமைகள் ஏதோவொரு வகையில் அனைவரையும் ஈர்க்கக்கூடியது. ஈரோடு இடைத்தேர்தலின் ஆரம்பத்தில் கூட்டணிக்குள் பிரச்னை இருந்தது. பின்னர் அது சரியாகிவிட்டது. இந்த கூட்டணி நன்றாக உள்ளது. எந்தப் பிரச்னையும் இல்லை என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu