பழங்குடிகளின் கோரிக்கை ஒரு வாரத்திற்குள் நிறைவேற்றப்படும்: கோவை மாவட்ட ஆட்சியர்
காடர் பழங்குடிகள்.
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 19 மலைவாழ் கிராமங்களில் 3000 க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.இதில் வால்பாறை அருகே வனப்பகுதிக்குள் கல்லார்குடி பகுதியில் 23 பழங்குடியின குடும்பங்கள் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2019 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் மண் சரிவினால் குடியிருப்புகள் பெரும் சேதமடைந்தன. இதையடுத்து காடர் பழங்குடிகள் மண் சரிவு ஏற்படாத இடமாக கருதிய தெப்பக்குளமேடு என்ற வனப்பகுதியில் குடியிருப்புகளை அமைத்தனர். புலிகள் காப்பக பகுதிக்குள் குடியிருக்க வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைதொடர்ந்து காடர் பழங்குடியின மக்கள் தெப்பகுள மேட்டில் குடியேறும் போராட்டத்தை தொடர் போராட்டமாக நடத்தினர். இதனையடுத்து அவர்களுக்கு கடந்த மாதம் 7 ஆம் தேதி மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜி பட்டா வழங்கினார். காடர் பழங்குடியினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் குடிசைகளை அமைத்தனர். முன்னறிவிப்பின்றி இரு தினங்களுக்கு முன் வனத்துறையினர் குடிசைகளை அப்புறப்படுத்தி , காடர் பழங்குடியினரை மிரட்டினர்.
காடர் இன மக்கள் வால்பாறை காவல் நிலையத்தில், வனத்துறையினர் மீது எஸ்சி, எஸ்டி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கோரி புகாரளித்தனர். இதனைத்தொடர்ந்து பொள்ளாச்சியில் பல்வேறு இயக்கங்கள் வனத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லார்குடி காடர் பழங்குடிகளின் பிரச்சனையை தவிர்க்க மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தை கூட்டத்தில், வனத்துறையினர் , கல்லார்குடி காடர் இன மக்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் சமீரான் காடர் பழங்குடியின மக்களுக்கு 12 ஏக்கர் நிலத்தில் தெப்பகுளமேட்டில், புதிய கிராமம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். அந்த 12 ஏக்கரில் 3 ஏக்கர் குடியிருக்க வீடுகள் கட்டித்தரப்படும் எனவும், காடர்களின் வாழ்வாதாரம் பாதுக்காக்கப்படுவதோடு, அவர்களின் மற்ற கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்ததாக சமூக ஆர்வலர் தன்ராஜ் தெரிவித்தார்.
மலைவாழ் மக்களின் கல்வி, மருத்துவம், அரசின் திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என ஆட்சியர் கூறியுள்ளார். வால்பாறையிலுள்ள மலைவாழ் கிராமங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu