வனத்துறையினரிடம் பிடிபட்ட புலிக்கு சிகிச்சை

புதருக்குள் பதுங்கியிருந்த புலியை பார்த்து வேட்டை தடுப்பு காவலர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து, புலியை வலை வீசி பிடித்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் யானை, புலி சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகிறது. வால்பாறை அருகே மூடிஸ் பகுதியில் நேற்று பட்டப்பகலில் புலி ஒன்று சுற்றித் திரிவதை பார்த்த பொதுமக்கள் செல்போனில் படம்பிடித்து மானாம்பள்ளி வனத்துறையினருக்கு அனுப்பினர். அதைத்தொடர்ந்து புலியை தேடும் பணியில் மானாம்பள்ளி மற்றும் வால்பாறை வனச்சரக ஊழியர்கள் ஈடுபட்டனர். தேயிலை தோட்டங்கள், முட்புதர்கள், பாழடைந்த கட்டிடங்கள் போன்றவற்றில் தேடினர். இந்நிலையில் மாலை சுமார் 6 மணியளவில் முடிஷ் எஸ்டேட் பகுதியில் உள்ள ஒரு முட்புதருக்குள் புலி பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் தேயிலை தோட்டத்தில் புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது புதருக்குள் பதுங்கியிருந்த புலியை பார்த்து வேட்டை தடுப்பு காவலர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து, புலியை வலை வீசி பிடித்தனர்.

பிடிபட்ட புலி சுமார் ஒன்றரை வயது பெண் புலி என்பதும், உடல்நலக் குறைபாடுடன் இருப்பதும் தெரியவந்தது. வேட்டையாடும் பொழுது மற்ற வன விலங்குகள் சண்டை போட்டதால் உடலில் காயம் ஏற்பட்டு சாப்பிட முடியாமல் உள்ளதாக வனத்துறை மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ரொட்டி கடை பகுதியில் உள்ள மனித விலங்கு மோதல் மற்றும் தடுப்பு மையத்திற்கு சிகிச்சைக்காக புலியை கொண்டு வந்து வனத்துறை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil