தமிழ் மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் கோவை தங்கம் ராஜினாமா
கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள தனியார் அரங்கில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் கோவை தங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "எனது 30 வயதில் வால்பாறை தொகுதியில் போட்டியிட இந்திராகாந்தி வாய்ப்பு தந்தார். 1998 தேர்தலில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மூப்பனார் வாய்ப்பு தந்தார். வால்பாறை மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பெற்று தந்துள்ளேன்.
கடந்த தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் சேர என்னை போன்றவர்களுக்கு உடன்பாடு இருக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஒரு சீட் பெற எதிர்ப்பு தெரிவித்தேன். இந்த தேர்தலில் தமாகா சுயேட்சை சின்னத்திற்கு பதிலாக இரட்டை இலையில் நிற்குமாறு அமைச்சர் வேலுமணி சொன்னார். திருவிக நகர் அல்லது தாராபுரத்தில் போட்டியிடுமாறு அமைச்சர்கள் வலியுறுத்தினர்.
வால்பாறை தொகுதிக்கு பதிலாக வேறு தொகுதியில் நிற்பதில் தனக்கு உடன்பாடு இல்லை. 6 தொகுதியை வாங்க வேண்டாம். சுயேட்சையாக சைக்கிள் சின்னத்தில் போட்டியிடலாம் என சொன்னதை ஜி.கே.வாசன் ஏற்கவில்லை.
ஜி.கே.வாசன் தன்னை கை விட்டு விட்டார். எனக்கு எதிராக சதி, துரோகம் நடந்துள்ளது. காமராசர் ஆட்சி வர வேண்டும் என்பதற்காக தான் தமாகாவில் இருந்தேன். தமிழ் மாநில காங்கிரஸ் பெயரை நான் தான் வாங்கி தந்தேன். காங்கிரசில் இருந்து விலகி தமிழ் மாநில காங்கிரசில் சேர்ந்ததற்காக வருத்தப்படுகிறேன். தமாகா துணைத்தலைவர், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட எல்லா பதவிகளையும் ராஜினாமா செய்கிறேன். தமாகா நிர்வாகிகள் பலர் ராஜினாமா செய்கின்றனர்.
வால்பாறை தொகுதியில் அரசியல் கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுத்தால், தான் தேர்தலில் போட்டியிட மாட்டேன். திமுகவில் சேரும் எண்ணம் இப்போது தனக்கு இல்லை. தனிக்கட்சி ஆரம்பிக்க தனக்கு தகுதியில்லை. வால்பாறை தொகுதி எனக்கு ஒதுக்காததற்கு ஒரே காரணம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தான். சுயேட்சையாக போட்டியிட விரும்பவில்லை என்றாலும் நாளை தன் நிலைப்பாடு மாறலாம்" என அவர் தெரிவித்தார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu