கால்நடைகளை தாக்கும் லம்பி நோய்: தடுப்பூசி போடுவது அவசியம்

கால்நடைகளை தாக்கும் லம்பி நோய்: தடுப்பூசி போடுவது அவசியம்
X

லம்பி நோய் பாதித்த கால்நடை (கோப்புப்படம்)

கோவை மாவட்டத்தில் கால்நடைகளை தாக்கும் லம்பி நோய் பரவாமல் தடுக்க கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுமாறு கால்நடை பராமரிப்புத்துறை அறிவுறுத்தல்

கோவை மாவட்டத்தில் விவசாயத்தோடு கால்நடை வளா்ப்பையும் முக்கியத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனா். கிராம பொருளாதார உயா்வில் கால்நடை வளா்ப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. கோவை மாவட்டத்தில் 2.63 லட்சம் கால்நடைகள் உள்ளன.

இந்நிலையில் கோவையில் கால்நடைகளிடையே 'லம்பி' என்ற புதிய வகை வைரஸ் நோய்த் தொற்று பரவி வருகிறது. கொசு, உண்ணிகளால் ஏற்படும் இந்நோய்த் தொற்று ஏற்பட்ட ஒரு கால்நடை மூலம் மற்ற கால்நடைகளுக்கு எளிதில் பரவுகிறது. எனவே, 'லம்பி' நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக கோவை மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் கூரியதாவதது:

கொசு, ஈ மற்றும் உண்ணி கடிப்பதன் மூலம் 'லம்பி' நோய்த் தொற்று பரவுகிறது. தோல்கழலை என்ற அழைக்கப்படும் இந்நோய் ஏற்படுவதற்கு கால்நடை சுகாதாரமின்மை முக்கிய காரணமாக உள்ளது. எனவே கால்நடை தொழுவங்களை மிகவும் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.

இந்நோய் பாதிப்பால் கால்நடைகள் உடலில் கட்டிகள் ஏற்படுகின்றன. தாய்ப் பசுவிடம் பால் குடிக்கும் கன்றுகளுக்கும், கொசுக்கள், ஈக்கள் மூலம் மற்ற கால்நடைகளுக்கும் இந்நோய்த் தொற்று எளிதில் பரவுகிறது. இதனை அலட்சியமாக விடுவதால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த நோய்த் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக ஆட்டம்மை தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்துக்கு 1.36 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 92 ஆயிரம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு கால்நடை வளா்ப்பவா்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனா். கால்நடை மருத்துவா்கள் போராடி தடுப்பூசிகளை செலுத்துகின்றனா்.

தடுப்பூசி செலுத்தாமல் விட்டு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்ட பின் நோய் பாதிப்பு ஏற்படுவதாக குற்றம் சாட்டுகின்றனா். இந்நிலையில் நான்கு மாதங்களுக்கு மேற்பட்ட கன்றுகுட்டிகளில் இருந்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சினையாகவுள்ள (கா்ப்பம்) கால்நடைகள் தவிர்த்து மற்ற கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

இது தவிர 10 வெற்றிலை, 10 கிராம் கல் உப்பு, 10 கிராம் மிளகு ஆகியவற்றுடன் சிறிது வெல்லம் சோ்த்து நன்கு இடித்து நான்கு நாள்களுக்கு காலை, மாலை என இரண்டு வேளைகளில் கால்நடைகளுக்கு வாய் வழியாக கொடுக்கலாம். இதன் மூலம் நோய்த் தொற்று குறைவதற்கு வாய்ப்புள்ளது. நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மட்டுமின்றி மற்ற கால்நடைகளுக்கும் வழங்கலாம். இதன் மூலம் கால்நடைகளுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும் என்று கூறினார்

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி