காரமடை அருகே வீட்டில் போலி மதுபான ஆலை: இருவர் கைது
வீட்டில் போலி மதுபான ஆலை
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தொட்டிபாளையம் செந்தூர் நகரில் சட்ட விரோதமாக கேரளாவில் இருந்து எரிசாராயம் கடத்தி வந்து, போலி மதுபானங்கள் தயாரித்து விற்கப்படுவதாக மதுவிலக்கு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன்பேரில் மதுவிலக்கு பிரிவு துணை கண்காணிப்பாளர் ஜனனி பிரியா தலைமையில் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் சுஜாதா, காரமடை காவல் ஆய்வாளர் ராஜசேகரன், மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளர் ராஜேஸ்கண்ணா, மற்றும் தனிப்படையினர் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் போலி மதுபானம் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கு போலி மதுபானங்கள் தயாரிக்கப் பயன்படும் எரி சாராயம் உள்பட அனைத்து உபகரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வீட்டில் இருந்த கேரளாவை சேர்ந்த அருண் (29), சந்தோஷ்குமார் (42) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தொடர்ந்து கைதான இருவரிடமும் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த அருண் என்பவர், தனது நண்பரான அனில்குமார் (50) என்பவருடன் சேர்ந்து 8 மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் காரமடை வந்தார்.
பின்னர் காரமடை அருகே உள்ள செந்தூர் நகரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கினர். அடிக்கடி இவர்கள் வெளியில் சென்று விடுவதால் வீட்டின் உரிமையாளருக்கு சந்தேகம் வந்துள்ளது.
இது குறித்து அவர்களிடம் வீட்டின் உரிமையாளர் கேட்டதற்கு, கேரளாவில் வியாபாரம் செய்து வருவதாகவும், வாரத்தில் 2-3 நாட்கள் அங்கு சென்று விடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர். அவரும் அதனை நம்பி விட்டார்.
இதனை தொடர்ந்து, அவர்கள் வீட்டிலேயே மதுபானம் தயாரிக்க ஆரம்பித்துள்ளனர். இதற்காக அவர்கள் கேரளாவில் இருந்து எரிசாராயம் உள்ளிட்டவற்றை வாங்கி வந்துள்ளனர்.
மதுபானம் தயாரித்த பின்னர் அந்த பாட்டில்களில் போலி ஸ்டிக்கர் ஓட்டி, மதுக்கடைகளில் பெட்டிகளில் அடுக்கி வைப்பது போன்று, பெட்டிகளை வாங்கி அதில் மதுபாட்டில்களை அடுக்கி வைத்து கேரளாவுக்கு அனுப்பி விற்பனை செய்ததும், இவர்களுக்கு சந்தோஷ் உதவியாக இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர், வீட்டில் இருந்த 1600 போலி மதுபான பாட்டில்கள், 5 கேன்களில் இருந்த 175 லிட்டர் எரிசாராயம், மதுபானங்கள் தயாரிக்க வைத்திருந்த உபகரணங்கள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
இதில் தொடர்புடைய அனில்குமார் என்பவர் ஏற்கனவே கடந்த 2021-ம் ஆண்டு கேரள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தது தெரியவந்தது.
மேலும் விடுதலையான பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால், அவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறையினர் தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் வைத்து கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் தான், காரமடை அருகே போலி மதுபான ஆலை செயல்பட்டு வந்த தகவல் தெரியவந்தது. அதன் அடிப்படையிலேயே மேலும் இருவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu