காந்திபுரம் சிக்னல் போக்குவரத்து நெரிசலில் அவதிப்படும் வாகன ஓட்டிகள்

காந்திபுரம் சிக்னல் போக்குவரத்து நெரிசலில் அவதிப்படும் வாகன ஓட்டிகள்
X

காந்திபுரம் போக்குவரத்து நெரிசல்

கோவை காந்திபுரம் சிக்னலில் மாற்று ஏற்பாடு காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

கோவை காந்திபுரத்தில் மத்திய பேருந்து நிலையம், நகர பேருந்து நிலையம், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து நிலையம் ஆகிய 3 பேருந்து நிலையங்கள் உள்ளன. இதனால் இந்த பகுதியில் உள்ள சிக்னலில் எப்போதுமே வாகன நெரிசல் அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில், கோவையில் பல இடங்களில் வாகன ஓட்டிகள் சிக்னலில் நிற்காமல் செல்வதற்காக சிக்னலை அகற்றிவிட்டு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இது நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அதுபோன்று காந்திபுரம் சிக்னலிலும் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து வரும் வாகனங்கள் கிராஸ்கட், கணபதி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல இடதுபுறம் திரும்பி, பின்னர் நகர பேருந்து நிலையம் எதிரே வலதுபுறம் திரும்பி செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். இதேபோன்று தான் கணபதி பகுதியில் இருந்து வரும் வாகனங்களும் செல்ல வேண்டும்.

இந்த சிக்னல் மாற்றம் செய்யப்பட்டு இருப்பது நல்ல முடிவு என்றாலும் டவுன் பேருந்துநிலையம் முன்பு வலதுபுறம் திரும்பும்போது, அந்தப்பகுதியில் ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் குவிந்து விடுகிறது.

இதன் காரணமாக அந்தப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதுடன், விபத்துகள் நடக்கும் அபாயமும் நிலவி வருகிறது. எனவே இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், கோவை மாநகர பகுதியில் அவினாசி சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சிக்னல் அகற்றப்பட்டு சில இடங்களில் ரவுண்டானாவும், சில இடங்களில் வேறு மாற்றமும் இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் காத்து நிற்காமல் சென்று வருகிறார்கள். இது வரவேற்பை பெற்று உள்ளது.

ஆனால் காந்திபுரம் சிக்னலில் செய்யப்பட்டு உள்ள மாற்று ஏற்பாட்டில் நகர பேருந்து நிலையம் முன்பு வாகனங்கள் வலதுபுறம் திரும்பும்படி வசதி செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் கணபதியில் இருந்து வரும் வாகனங்கள், அரசு மகளிர் பாலிடெக்னிக் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் அங்கு திரும்புவதற்காக ஒரே இடத்தில் சேர்கிறது. இதன் காரணமாக தினமும் அந்தப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

குறிப்பாக பேருந்துகள் திரும்பும் போது அதன் பின்னால் பைக்கில் வருபவர்கள் பேருந்து மீது மோதும் அபாய நிலையும் ஏற்பட்டு வருகிறது. ஒரே இடத்தில் திரும்பும் வசதி செய்யப்பட்டு உள்ளதால்தான் இந்த நிலை இருக்கிறது. அதையே மாற்றி அமைத்தால் இதுபோன்ற பாதிப்பு ஏற்படாது.

எனவே மாற்று ஏற்பாடாக மத்திய பேருந்து நிலையம் முன்புள்ள சாலையில் அகலமான இடம் இருக்கும் பகுதியில் வாகனங்கள் வலதுபுறம் திரும்பி செல்லும் வசதியை செய்ய வேண்டும். அத்துடன் அங்கு போக்குவரத்தை கண்காணிக்க கூடுதல் காவல்துறையினரை நியமிக்க வேண்டும் என்று கூறினார்கள்

கணபதி, சரவணம்பட்டி பகுதியில் இருந்து வரும் பேருந்துகள் நகர பேருந்து நிலையம் முன்பு நிற்காமல் காட்டூர் காவல் நிலையம் முன்பு நிற்கிறது. இதனால் நகர பேருந்து நிலையம் செல்ல வேண்டியவர்கள் சிலர், அந்தப்பகுதியில் பேருந்து மெதுவாக செல்லும்போது குதித்துவிடுகிறார்கள். இதனால் சிலர் அங்கு சாலையின் நடுவே வைத்து இருக்கும் தடுப்புகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

அதுபோன்று சாலையை கடக்க முயல்பவர்களும் அவதியடைந்து வருகிறார்கள். இதற்கு தீர்வு காண வேண்டும்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், தற்போது சோதனைஅடிப்படையில் இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டால் இதனை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!