துடியலூர் அருகே கிருஷ்ணசாமி கோவில் நாளை மறுநாள் கும்பாபிஷேகம்
கோவை துடியலூர் அடுத்த பன்னீர்மடையில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கிருஷ்ணசாமி கோவில், உலகளந்த பெருமாள் மற்றும் செல்வ விநாயகர் கோவில்கள் அமைந்து உள்ளன. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில்களில் கடந்த சில மாதங்களாக மராமத்து பணிகள், புதுப்பித்தல் போன்ற பல்வேறு திருப்பணிகள் நடைபெற்றன.
இந்த கோவில்களில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் 27ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இன்று காலை 9 மணி அளவில் மகா கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. பின்னர் வாஸ்து ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தன.
மாலை 5 மணி அளவில் தர்மராசா கோவிலில் இருந்து முளைப்பாரி எடுத்து வருதல், புற்றுமண் எடுத்து பூஜை செய்தல், யாகசாலை பிரவேசம், முதல் கால யாக வேள்வி பூஜை, பரிவார கலசபூஜை கள் நடை பெறுகின்றன.
தொடர்ந்து நாளை காலை 6 மணியளவில் 2-ம்கால யாக வேள்வி பூஜை தொடங்குகிறது. அப்போது கலசபூஜை, தீபாராதனை, ஹோமம், சுவாமிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகி ன்றன.
27ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 3-வதுகால வேள்வி பூஜைகள் நடக்கின்றன. காலை 9 மணி முதல் விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இந்த நிகழ்வை பேரூராதீனம் சாந்தலிங்கம் மருதாசலஅடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், கெளமார சிரவையாதீனம் ராமானந்த குமரகுருபரசுவாமிகள், ஆனைகட்டி லலிதாம்பிகை பீடம் சுவாமி ஜகதாதமானந்தஸ்ரஸ்அதி, பழனியாதீனம் சாதுசண்முக அடிகளார் ஆகியோர் நடத்தி வைக்கின்றனர். தொடர்ந்து மகா அன்னதானம் நடைபெறுகிறது.
மதியம் 12 மணியளவில் அலங்கார பூஜைகள் நடைபெறும். அன்று மாலை கிருஷ்ணசுவாமி மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ உலகளந்த பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இதில் பன்னீர் மடை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.
கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை கிருஷ்ணசாமி கோயில் இறை வழிபாட்டு மன்றத்தினர், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu