தொண்டாமுத்தூரில் காட்டு யானை பிரச்சனைக்கு தீர்வு காணக்கோரி எஸ்.பி. வேலுமணி மனு
Coimbatore News- மனு அளிக்க வந்த எஸ்.பி. வேலுமணி
Coimbatore News, Coimbatore News Today,- கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள விராலியூர் பகுதியில் நேற்று காட்டு யானை தாக்கியதில் கார்த்திக் என்ற 25 வயது இளைஞர் உயிரிழந்தார். இந்நிலையில் அதே காட்டு யானை இன்று காலை பொதுமக்கள் சிலரையும் தாக்கியது. கடந்த இரண்டு தினங்களில் காட்டு யானை தாக்கி 8 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் அந்த பகுதி பொதுமக்களுடன் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.
அப்போது அனைவரையும் உள்ளே அனுமதிக்காத நிலையில் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அனைவரும் ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்ட நிலையில் , முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடியை நேரில் சந்தித்து பேசினார். பின்னர் அறையில் இருந்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி,முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆகிய இருவரும் கீழே இறங்கி வந்து பொதுமக்களை சந்தித்து பேசினர்.
அப்போது யானை நடமாட்டத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பொதுமக்களிடம் தெரிவித்தார். இதனைதொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”கோவையில் மனு கொடுக்க வந்த பொதுமக்களை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்க மறுக்கின்றனர். பிரச்சினையை சொல்ல வந்த மக்களை தடுப்பது என்பதை ஏற்க முடியாது.
தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதியில் அடிக்கடி யானைகள் வருகின்றது. இதனால் பொதுமக்களுக்கு அடிக்கடி பாதிப்பு ஏற்படுகின்றது. விராலியூர் பகுதியில் காட்டுயானை தாக்கியதில் நேற்று உயிரிழந்துள்ளார். இன்று காலையிலும் பொதுமக்களை யானை தாக்கி இருக்கின்றது. கோவை வனத்துறை யானைகளை விரட்டுவதில் முறையாக செயல்படுவதில்லை. பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய நிதி உதவியும் வழங்குவதில்லை. தொண்டாமுத்தூர் பகுதியில் டார்ச் லைட் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும். வனப்பகுதி அருகில் அகழி, மின்வேலி போன்றவை அமைக்க வேண்டும். அதை முறையாக தொடர்ந்து பராமரிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அதிகமாக கொடுக்க வேண்டும். விளை நிலங்கள் சேதத்திற்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
நேற்று ஒருவர் இறந்த நிலையில், வனத்துறை அங்கேயே இருந்திருந்தால் இன்று காலை மக்கள் காயம் அடைந்து இருக்க மாட்டார்கள். அந்த பகுதியில் பொதுமக்களை தொடர்ந்து தாக்கி வரும் சம்மந்தப்பட்ட யானையை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். பொது மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். காட்டுயானைகளை விரட்டுவதில் கோவை வனத்துறை உரிய நடவடிக்கையினை மேற்கொள்வதில்லை. யானைகளை விரட்ட உரிய நடவடிக்கைகள் எடுப்பதை வனத்துறை உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu