கோவைக்கு திமுக அரசு எந்த புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை : எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு
Coimbatore News- எஸ்.பி. வேலுமணி
Coimbatore News, Coimbatore News Today- கோவை உக்கடம்- ஆத்துப்பாலம் இடையே 481 கோடி மதிப்பில் புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தை முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி. வேலுமணி காரில் பயணித்தபடி பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எஸ்.பி. வேலுமணி, “கோவை மாவட்ட மக்களின் 25 ஆண்டு கால கனவு திட்டமான உக்கடம்- ஆத்துப்பாலம் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு 2011ம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியால் 216 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இந்த மேம்பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 2021ம் ஆண்டு கூடுதலாக 265.44 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. மொத்தம் 481.44 கோடி மதிப்பில் இந்த திட்டத்தை தந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கோவை மாவட்ட மக்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த திட்டத்தை நேற்று தமிழக முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். ஆனால் சுங்கம் சாலையில் பணிகள் இன்னும் முடிவு பெறாமல் இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகியும், இன்னும் பணிகள் முடிவடையவில்லை. இந்த மேம்பால பணிகளை ஒரு வருடத்திற்குள் முடித்திருக்கலாம், ஆனால் மூன்று வருடங்கள் எடுத்துக் கொண்டும் இன்றும் முழுமையாக முடிக்கப்படாமல் இருக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலை துறையும் விரைந்து இந்த பணிகளை முடிக்க வேண்டும். கோவை மாவட்டத்திற்கு திமுக எந்த ஒரு புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை மட்டுமே திறந்து வைத்து வருகிறார்கள்.
அத்திக்கடவு - அவிநாசி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் அனைத்து குளங்களிலும் நீர் நிரப்ப வேண்டும். மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டத்திலும் முழுமையாக தண்ணீர் மக்களுக்குச் சென்றடையவில்லை. அவிநாசி சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். விமான நிலைய விரிவாக்கத்தையும் உடனடியாக கொண்டு வர வேண்டும். உடனடியாக அந்த பணிகளை செய்தால் தான் பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் செல்லும்.
இதனால் இங்கு தொழில் உற்பத்தி, கட்டமைப்புகள் பெருகும். வெள்ளலூர் பேருந்து நிலைய பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்ட குளங்கள் அனைத்தும் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. அதனை மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்க வேண்டும். கோவை அரசு மருத்துவமனை சுத்தமில்லாமல் இருக்கிறது. அதனை நல்ல முறையில் சுத்தப்படுத்தி பராமரிக்க வேண்டும். நொய்யல் ஆற்று வழித்தடங்களையும் பராமரிக்க வேண்டும். இந்த மேம்பாலத்தில் அறிவிப்பு பலகைகள் எச்சரிக்கை பலகைகளை எல்லாம் வைத்து விபத்துகளை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்” என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu