கோவை பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீவிபத்தில் பல லட்சம் சேதம்
கோவை பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து
கோவை குனியமுத்தூர் அடுத்த இடையர்பாளையம் பகுதியில் கண்ணப்பன் தோட்டம் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கே ஏராளமான பிளாஸ்டிக் குடோன்கள் மற்றும் சிறிய ரக தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மதியம் பணியாளர்கள் பணியில் இருந்த போது, திடீரென பிளாஸ்டிக் குடோனில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் உடனடியாக வெளியேறியுள்ளனர். தீ மளமளவென பரவி, பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் எரியத் துவங்கியது.
இந்த தீ அருகாமையில் உள்ள தலையணை செய்ய பயன்படுத்தப்படும் பஞ்சுகள் வைக்கப்பட்டிருந்த மற்றொருவரின் குடோனுக்கும் பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கடுமையான புகை மூட்டம் ஏற்பட்டது. அருகாமை குடோன்களில் இருந்த பணியாளர்கள் உடனடியாக வெளியேறினர். இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மூன்று தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பிளாஸ்டிக் மற்றும் பஞ்சு ஆகியவை தீப்பிடித்து தொடர்ந்து எரிந்ததால், தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனிடையே இந்த குடோன்களின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கோவை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் வாகனம் ஒன்றும் தீயில் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் பல இலட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. தீயை முற்றிலும் அணைத்த பின்னர், தீ விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என குனியமுத்தூர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu