பேரூர் பட்டீசுவரர் கோவிலில் நாற்று நடவு திருவிழா
நாற்று நடவு திருவிழா
கோவை மாவட்டம் பேரூர் பகுதியில் பட்டீசுவரர் கோவில் அமைந்துள்ளது. பேரூர் புராணத்தில் கச்சியப்ப முனிவர், பேரூர் பட்டீசுவர் கோவிலுக்கு எதிரே உள்ள நாற்று நடவு வயலில் சிவனும், பார்வதியும் வேடம் தரித்து, உலக மக்கள் நன்மை பெற வேண்டி நாற்று நடவு செய்ததாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் ஆண்டுதோறும் ஆனி மாதம் பேரூர் பட்டீசுவரர் கோவிலில் ஆனி உற்சவ நாற்று நடவு திருவிழா நடக்கிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா பேரூர் பட்டீசுவரர் கோவிலில் உள்ள அம்மன் மண்டபத்தில் தொடங்கியது.அப்போது பட்டீசுவரர் - பச்சைநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கலச பூஜை, அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடைபெற்றன.
இதனை தொடர்ந்து பேரூர் கோவில் தெப்பக்குளம் அருகில் உள்ள தேவேந்திர குல வேளாளர் மண்டபத்தில் நெல் விதைகள் பதியம் செய்யப்பட்டது. இங்கு 8 நாட்களாக தினசரி மாலை நேரத்தில் நெல் விதைகளுக்கு நீர் தெளிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையடுத்து 2 மாடுகள் கலப்பையில் பூட்டப்பட்டு பொன்னேறு பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து அந்த மாடுகள் நேராக நாற்று நடவு வயலுக்கு கொண்டு வரப்பட்டு ஏர் உழுதல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஈஸ்வரர் - அம்மாள் பல்லக்கில் எழுந்தருளினர். பின்னர் மண்டபத்தில் இருந்த விதை நெல் நாற்றுகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, பேரூர் கோவில் குருக்கள் வயலில் இறங்கி நாற்றை நட்டார். இதனை அடுத்து ஊர் பட்டக்காரர்கள், பெண்கள், ஆண்கள் பலர் வயலில் இறங்கி குலவையிட்டு நாற்றுகளை நட்டனர். நாற்று நடும் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சுவாமி எழுந்தருளி இருந்த மண்டபத்தில் பள்ளுபடலம் வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு தீபாராதனை வழிபாடுகள் நடந்தன. அதன் பின்னர் சுவாமி திருவீதி உலா நடந்தது. பேரூர் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu