இஸ்லாமியர் மயானப்பாதை வனத்துறையினரால் தடுப்பு - வனத்துறை அமைச்சர் ஆய்வு

இஸ்லாமியர் மயானப்பாதை வனத்துறையினரால் தடுப்பு - வனத்துறை அமைச்சர் ஆய்வு
X

அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு

மாநகராட்சிக்கு சொந்தமான கபர்ஸ்தான் செல்லும் பாதை பெரிய கற்கள் போடப்பட்டு தடை செய்யப்பட்டு இருந்தது.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட மைல்கல் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான கபர்ஸ்தான் (இஸ்லாமியர்கள் மயானம்) உள்ளது. இங்கு செல்லும் பாதை இன்று காலை பெரிய கற்கள் போடப்பட்டு தடை செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து அங்கு வந்த இஸ்லாமியர்கள் இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அங்கு வந்த அதிகாரிகள் இது குறித்து விசாரித்த போது அது வனத்துறை இடம் என்பதால் வனத்துறையினர் அந்த பாதையை அடைத்து இருப்பது தெரியவந்தது.

இரவோடு இரவாக ஏராளமான கற்களை பாதையில் போட்டு வழியை மறைத்துள்ளதும் தெரியவந்த்து. சமீபத்தில் பயன்பாட்டுக்கு வந்த இந்த கபர்ஸ்தானில் கொரொனாவால் இறந்த இஸ்லாமியர்களின் உடல்களை அடக்கம் செய்ய இந்த பாதை பயன்படுத்தப்பட்டு வந்தது. கபர்ஸ்தானுக்கு செல்லும் பாதையை சரி செய்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் மாநகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். ஏராளமான இஸ்லாமியர்கள் அங்கு ஒன்று திரண்டனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டார். வனத்துறைக்கு சொந்தமான இந்த இடத்தை குவாரி லாரிகள் செல்வதால் கற்கள் போட்டு தடை செய்யப்பட்டதாக தெரிவித்த அவர், மாநகராட்சி அதிகாரிகளுடன் பேசி இருப்பதாகவும் 12 நாளில் கபர்ஸ்தான் செல்வதற்கு மாற்று சாலை அமைக்கப்பட்டு விடும் என தெரிவித்தார். அது வரை பழைய பாதையை பயன்படுத்தும் வகையில் கற்களை அகற்ற சொல்லி இருப்பதாகவும், உடல்களை எடுத்து செல்லும் வாகனம் செல்லும் அளவிற்கு பாதையை ஏற்படுத்தி சாலை அமைக்கும் வரை அந்த பாதையை உடல்களை கொண்டு வர பயன்படுத்தி கொள்ளலாம் எனவும், அந்த பாதையில் தனியார் சிமென்ட் ஆலை குவாரி லாரிகள் சென்றால் நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு தெரிவித்து இருப்பதாகவும் அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்தார். கொரொனா நேரத்தில் இஸ்லாமியர்களின் உடல்களை அடக்கம் செய்ய பயன்படுத்தப்பட்டு வந்த இந்த பாதை அடைக்கப்பட்டது இஸ்லாமியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாநகராட்சி பொது கபர்ஸ்த்தான் அமைத்த பின்னரும் அதற்கு பாதை ஏற்படுத்தாமல் இருந்த்துடன், வனத்துறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு இடையே சரியான திட்டமிடல் இல்லாமல் இருப்பதுமே பிரச்சினைக்கு காரணம் என கூறப்படுகின்றது. அமைச்சர் ராமசந்திரன் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து உறுதி அளித்ததை தொடர்ந்து இஸ்லாமியர்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்