கோவை அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

கோவை அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு
X

காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர்

மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதிகளில் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம்.

கோவையை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள அட்டுகல் என்ற பகுதியில் பழங்குடியின குடியிருப்பிற்கு காட்டு யானைகள் அடிக்கடி வந்து செல்வதுண்டு. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 45 வயது உடைய ரங்கன் (எ) ரங்கசாமி என்பவர் வனப்பகுதியை ஒட்டி உள்ள பட்டா நிலப் பகுதியான புளியந்தோப்பு பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க இரவு ஏழு முப்பது மணி அளவில் சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த காட்டு யானை ஒன்று எதிர்பாராத விதமாக ரங்கனை தாக்கியதில் காயம் அடைந்தார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் விரைந்து வந்த வனப் பணியாளர்கள் காட்டு யானை விரட்டினர். பின்னர் ரங்கனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ரங்கன் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த ரங்கனுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அட்டுக்கல் மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி