பாரதியார் பல்கலை.யில் மர்ம நபர் நடமாட்டம் குறித்த சிசிடிவி காட்சி
கோப்பு படம்
பாரதியார் பல்கலைக்கழகம் கோவையில் மருதமலை ரோட்டில் இருக்கிறது. அங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் வெளியூரில் இருந்து படிக்க வரும் மாணவர்கள் அங்குள்ள கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கின்றனர். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள செல்லம்மா விடுதியில் 3000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் தங்கியுள்ளனர்.
கடந்த பல நாட்களாக இரவு நேரங்களில் அரைகுறை ஆடையுடன் இரு மர்மநபர்கள் விடுதிக்குள் நுழைந்து மாணவிகளின் செல்போன்களை திருடிச்செல்வதாக மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். ஆனால்,பல்கலை நிர்வாகம் சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மார்ச் மாத இறுதியில் மர்மநபர்கள் இரவு அரைகுறை ஆடையுடன் விடுதிக்கு வந்துள்ளனர். இதனை பார்த்து ஆத்திரமடைந்த 200-க்கும் அதிகமான மாணவிகள் நடவடிக்கை எடுக்காத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும்,கல்லூரி விடுதியில் நுழையும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போராட்டம் நடத்தினர்.
அதன் பின் கல்லூரி முன்பு உள்ள சாலையில் போராட்டம் நடத்த முயன்றபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மாணவிகளை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் கல்லூரி வளாகத்தில் மீண்டும் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர்,பல்கலைக்கழக நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து மாணவிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் மாணவியர் விடுதிக்குள் நுழைந்து பின்னர் வெளியே செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் குறித்து பல்கலை.நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu