ஈஷா யோகா மையத்தில் காவல் துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை
கோவை ஈசா யோகா மையத்திற்குள் நுழையும் போலீஸ் வாகனம்.
கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த பேராசிரியர் காமராஜ் என்பவரின் மகள்கள் ஈஷா யோகா மையத்தில் இருக்கின்ற நிலையில், அவர்களை சந்திக்க ஈஷா யோகா மையத்தினர் அனுமதி மறுப்பதாக தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு போட்டு இருந்தார். பேராசிரியர் காமராஜர் மகள்கள் இருவரும் ஈசா யோகா மையத்தில் துறவியாக மாற்றுவதாகவும் உறவினர்களை சந்திக்க அனுமதி மறுப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டு உள்ளார். ஈஷா யோகா மையத்தில் பல்வேறு குற்ற சம்பவம் நடப்பதாக விமர்சித்த காமராஜர், மருத்துவர் ஒருவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பான வழக்கில் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மனுதாரர் மற்றும் வழக்கறிஞர் தெரிவித்ததையடுத்து, நீதிபதிகள் விரிவாக விசாரணை நடத்த உத்தரவிட்டு இருந்தனர். ஈஷா மையத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் தன்மை, நீதிமன்றத்தில் ஆஜரான இரு பெண்களும் பேசிய விதத்தை பார்க்கும் போது, குற்றச்சாட்டுகளின் பின்னணியில் உள்ள உண்மை தன்மை தெரிந்து கொள்ள விரிவாக விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியது.
ஈஷா யோகா மையத்துக்கு எதிராக பதிவான குற்ற வழக்குகளின் விவரங்கள், மனுதாரரும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞரும் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்து இருக்கின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். அதன் அடிப்படையில் ஈசா யோகா மையத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் அந்த அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu