மாஞ்சோலையில் இருந்து மக்களை வெளியேற்றக்கூடாது - டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி
கோவை குனியமுத்தூரில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கொல்கத்தா மருத்துவ முதுநிலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். எப்போது நள்ளிரவில் பெண்மணி தைரியமாக நடந்து செல்ல முடிகின்றதோ அப்போதுதான் உண்மையான சுதந்திரம் என காந்தி சொல்லி இருக்கின்றார்.
கொல்கத்தா சம்பவத்தில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் சிபிஐயிடம் ஒப்படைக்க பட்டுள்ளது. கொல்கத்தாவில் சட்டம் ஒழுங்கு இருக்கின்றதா என்ற சந்தேகம் இருக்கின்றது. மாநில அரசிடம் இருந்து சட்டம் ஒழுங்கை சிறிது காலம் மத்திய அரசு கையில் எடுத்து கொள்ள வேண்டும்.சிபிஐ விரிவான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டணை பெற்று தர வேண்டும். அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் செய்து கொடுக்க வேண்டும்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் தேயிலை தோட்டங்களில் ஏராளமானவர்கள் பணிபுரிகின்றனர். மாஞ்சோலை தேயிலை தோட்டம் 1929 ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியால் 99 ஆண்டு குத்தகைக்கு பெற்றார்கள். அவர்களின் குத்தகை 2028 ல் நிறைவடைகின்றது. ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் அங்கிருக்கின்றனர். கம்பெனிதான் வெளியேற வேண்டுமே தவிர, மக்கள் அல்ல. கம்பெனி மூலமாக மக்களை வெளியேற்றும் முயற்சி நடக்கின்றது.
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அங்கேயே இருந்து வனத்தை பாதுகாத்து வருகின்றனர். இந்த விவகாரத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கின்றேன். மாநில அரசு இதை கௌரவ பிரச்சினையாக எடுத்துக் கொள்ள கூடாது.வால்பாறை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, ஏற்காடு என பல பகுதிகளில் இந்த மாதிரி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்கின்றனர், இதை கருத்தில் எடுத்துக் கொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும்.
மத்திய அரசின் துறைகளில் 22 சதவீத ஒதுக்கீடு, மாநில அரசில் 19 சதவீத இட ஒதுக்கீடு தாழத்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களுக்கு வழங்கப்படுகின்றது. தமிழகத்தில் 18 சதவீதம் இட ஒதுக்கீடு கடைநிலை அரசு பணிகளில் மட்டுமே கொடுக்கப்படுகின்றது. ஏ,பி பிரிவு அரசு பணிகளில் 3 சதவீதம் கூட நிரப்பபடவில்லை. அதை நிரப்புவதற்கு பதிலாக அருந்த்தியினருக்கு உள் இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. ஒருதலைபட்சமாக அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து, முன்னுரிமை கொடுத்து அருந்ததியினரை மட்டுமே பட்டியலின இடங்களை நிரப்பி விட்டனர். இதை அரசியல் கட்சிகள் எதிர்க்கவில்லை.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் முன்னுரிமை கொடுக்க சொல்லவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பில் கிரிமிலேயேர் பிரச்சினைகள் இருக்கின்றது. பட்டியல் சமூகத்தில் உள்ள 3 சமுதாய பிரதிநிதிகளை அழைத்து தமிழக முதல்வர் தலைமையில் கூட்டம் நடத்த வேண்டும். இதில் பிரச்சினைகள் ஏற்படாமல் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu