ஆடிப்பெருக்கை முன்னிட்டு பேரூரில் முன்னோர்களுக்கு திதி கொடுத்த பக்தர்கள்
நொய்யல் ஆற்றங்கரையில் பக்தர்கள் வழிபாடு
இன்று ஆடிப் பெருக்கு விழா தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடிப்பெருக்கு விழா கோவை மாவட்டத்தில் பேரூர் நொய்யல் ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் களைகட்டும். ஆனால் கடந்த ஆண்டில் தண்ணீர் இல்லாததால் ஆடிப்பெருக்கு விமரிசையாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் தற்போது வரை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் நேற்று மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி நொய்யல், பவானி ஆறு மற்றும் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
இதைத் தொடர்ந்து இன்று பக்தர்கள் ஆற்றில் இறங்கி நீராடாமல், அருகில் உள்ள குளியல் அறைகள் மற்றும் தண்ணீர் தொட்டிகளில் இருந்து குளித்து சென்றனர். ஆற்றின் படித்துறையில் சுமங்கலி பெண்கள், புதுத்தாலி கயிறு மாற்றி கொண்டனர்.
இதே போல் ஏராளமான ஆண்களும், பெண்களும் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளா மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு செல்வது வழக்கம்.
இன்று காலை அதிக அளவில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து, காகத்திற்கு உணவு வைத்து வழிவட்டனர். மேலும் முன்னோர்களை நினைத்து ஆற்றில் வாழை இலையில் விளக்கு வைத்து அனுப்பி வழிபாடு நடத்துவது வழக்கம். ஆனால் நீர் நிலைகள் மாசு அடைவதால் பழைய ஆடைகள், மாலை மற்றும் விளக்குகள் போன்றவற்றை ஆற்றில் அனுப்ப அனுமதி இல்லை என்பதால் படித் துறையில் உள்ள விநாயகர் கோவில் அரச மரத்தடியில் விளக்குகளை பொதுமக்கள் வைத்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu