மகாசிவராத்திரி: வெள்ளியங்கிரி மலையேற குவியும் பக்தர்கள்
வெள்ளியங்கிரியில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் வெள்ளியங்கிரி திருக்கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலை ஒட்டியுள்ள மலைப்பகுதியில் ஏழு மலைகளை தாண்டி சென்றால், சுயம்பு வடிவில் இருக்கக்கூடிய வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க முடியும்.
ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து மே மாதம் இறுதி வாரம் வரைக்கும் பக்தர்கள் மலை ஏறுவதற்கு வனத்துறையினர் அனுமதி அளிப்பார்கள். அதில் மகாசிவராத்திரி முதல் சித்ரா பௌர்ணமி வரையிலான காலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்காண பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம்.
இந்தாண்டு ஏராளமான பக்தர்கள் வெள்ளிங்கிரி மலையேற அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் வருகின்ற வெள்ளிக்கிழமை மகாசிவராத்திரி வருவதை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறுவதற்கு திரண்டு இருக்கக்கூடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மலையடிவாரத்தில் வனத்துறையினர் சோதனைக்கு பின்பு பக்தர்களை மலையேற அனுமதித்து வருகின்றனர். மேலும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை தவிர்த்து மலையேறி சாமி தரிசனம் செய்துவிட்டு வருமாறு வனத்துறையினர் வேண்டுகோள் வைத்துள்ளனர். தண்ணீர் பாட்டில்களை மலைப்பகுதியில் வீசுவதை தவிர்க்கும் வகையில் 20 ரூபாய் முன்பணமாக பெற்றுக் கொண்டு, பாட்டிலில் வனத்துறையினர் ஸ்டிக்கர் ஒட்டி அனுப்புகின்றனர். அந்த ஸ்டிக்கர் உடன் உள்ள பாட்டிலை திரும்ப தந்தால், 20 ரூபாய் திரும்ப தரப்பட்டு வருகிறது.
மகாசிவராத்திரியை முன்னிட்டு வரக்கூடிய நாட்களில் மலையேற வரும் பக்தர்கள் கூட்டம் இன்னும் அதிகரிக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu