காட்டுப்பன்றிகளால் விளைநிலங்கள் சேதம் தொண்டாமுத்துார் விவசாயிகள் கவலை

காட்டுப்பன்றிகளால் விளைநிலங்கள் சேதம்  தொண்டாமுத்துார் விவசாயிகள் கவலை
X

கோவை மாவட்டம் தொண்டாமுத்துாரில் காட்டுப்பன்றிகளால் சேதமடைந்த வாழைத்தோட்டம்.

வாழை மரங்களை இரவு நேரத்தில் வரும் காட்டுபன்றிகள் வேரோடு பிடுங்கி சாய்த்து வருவதாக கோவை தொண்டாமுத்தூர் பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை:

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் கரும்பு, வாழை, சின்ன வெங்காயம், மஞ்சள் போன்றவை பயிரிடப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக யானை, காட்டுபன்றிகள் போன்ற வனவிலங்குகள் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், கடந்த 10 நாட்களாக காட்டுபன்றிகளின் அட்டகாசத்தால் செய்வதறியாது தவித்து வருகின்றனர், தொண்டாமுத்தூர் விவசாயிகள். தொண்டாமுத்தூர், தேவராயபுரம் பகுதியில் விவசாயிகள் பலர் வாழை பயிரிட்டு வருகின்றனர். 4 மாதமேயான வாழை மரங்களை இரவு நேரத்தில் வரும் காட்டுபன்றிகள் வேரோடு பிடுங்கி சாய்த்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விவசாயி பழனிச்சாமி கூறியதாவது:

கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் 30 க்கும் மேற்பட்ட காட்டுபன்றிகள் விளை நிலங்களில் புகுந்து வாழை மரங்களை வேரோடு சாய்த்து அதன் தண்டு பகுதியை மட்டும் உண்டு வருகின்றன. இதனால் 5 ஏக்கரில் பயிரிடபட்டுள்ள வாழை மரங்கள் முற்றிலும் சேதமடைந்தன. இது தொடர்பாக பலமுறை மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

காட்டுயானைகளால் ஏற்படும் சேதத்தை விட, காட்டு பன்றிகளால் ஏற்படும் சேதம் என்பது அதிகமாக உள்ளது. வனப்பகுதியை விட்டு சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள விளை நிலங்களில் காட்டுபன்றிகள் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க அரசு உடனடியாக காட்டுபன்றிகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பழனிசாமி கூறினார்.

இதே குற்றச்சாட்டை தொண்டாமுத்துார் பகுதி விவசாயிகள் பலர் தெரிவித்தனர்.



Tags

Next Story
ai in future agriculture