ரூ.1.80 கோடி கள்ள நோட்டு சிக்கிய வழக்கு - மேலும் இருவர் கைது

ரூபாய் 1.80 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் சிக்கிய வழக்கில், கோவையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் உதயம்பேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடுவதாக கேரளா தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த மார்ச் 28 ஆம் தேதி அங்கு ஆய்வு மேற்கொண்ட கேரள போலீசார், கோவையை சேர்ந்த பிரியன்லால் என்பவரை கைது செய்தனர்; அவரிடம் இருந்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணை அடிப்படையில், நேற்று இரவு கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு போலிசார் , கோவை உக்கடம் அல்அமீன் காலணியில் உள்ள அஸ்ரப் அலி (21) என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் ரூ.8 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கள்ளநோட்டுகள் இருந்தது தெரியவந்தது.
அஸ்ரப் கொடுத்த தகவல் அடிப்படையில், கோவை கரும்புகடையை சேர்ந்த சையது சுல்தான் (32) என்பரது வீட்டில் கேரளா போலீசார் சோதனையிட்ட போது, அங்கு 1.80 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் கள்ள நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் முடிவில், சையது சுல்தான், அஸ்ரப் இருவரையும் கைது செய்த கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு போலிசார், பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணைக்காக இருவரையும் கேரளா மாநிலத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும், அவர்களது நண்பர்களான கரும்புக்கடை பகுதியை சேர்ந்த முகமது ரிஷாத் மற்றும் வசந்தம் பகுதியை சேர்ந்த அசாரூதின் ஆகிய இருவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!