கோவை காவல் அதிகாரிகள் 3 பேருக்கு அபராதம்.. மனித உரிமை ஆணையம் உத்தரவு...
மாநில மனித உரிமை ஆணைய அலுவலகம். (கோப்பு படம்).
கோவை மாவட்டம் திருமலையம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றிய இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமல் செய்வது பற்றி திருமலையம் பாளையம் பேரூராட்சி அலுவலகத்திற்கு தகவல் கோரியுள்ளார் . இந்த நிலையில் பேரூராட்சி தற்காலிக பணியாளர் மணிகண்டன் என்பவர் ரமேஷ்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும், நேரடியாக ரமேஷ் குமாரின் வீட்டுக்கு சென்று மணிகண்டன் மிரட்டினாராம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோரிடம் ரமேஷ் குமார் புகார் தெரிவித்து உள்ளார். இதற்கிடையே, காவல் ஆய்வாளர்கள் தூய மணி வெள்ளைச்சாமி, மணிவண்ணன், உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார் ஆகியோர் திடீரென ஒருநாள் ரமேஷ்குமார் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரமேஷ் குமாரை விசாரிக்க வேண்டும் எனக் கூறி எழுப்பி அழைத்துச் சென்றனர். பின்னர், சிறிது நேரம் கழித்து அவரை விடுவித்த போலீஸார், மறுநாள் காலை 11 மணிக்கு துணை காவல் கண்காணிப்பாளரை சந்திக்க வேண்டும் என கூறி சென்றுள்ளனர். காவல் அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் தன்னுடைய மனித உரிமை மீறப்பட்டதாக ரமேஷ் குமார் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.
அதை விசாரித்த ஆணையம் பாதிக்கப்பட்ட ரமேஷ் குமாருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து உள்ளது. அந்த தொகையை காவல் ஆய்வாளர்கள் தூய மணி வெள்ளைச்சாமி, மணிவண்ணன் ஆகியோரிடம் இருந்து தலா 25 ஆயிரம் ரூபாயும், உதவி ஆய்வாளர் ஆனந்தகுமாரிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாயும் வசூலிக்க வேண்டும் என்றும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவையில் காவல் அதிகாரிகள் 3 பேருக்கு மாநில மனித உரிமை ஆணையம் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ள சம்பவம் கோவை காவல் துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu