தமிழகத்திற்கே தலைக்குனிவு.. கோவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை பேட்டி...
கோவையில் தம்பிதுரை எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதிமுக மூத்த தலைவரும், மாநிலங்களவை அதிமுக தலைவருமான தம்பிதுரை கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய அரசுக்கு எதிராக அதிமுக எம்.பி.க்கள் குரல் எழுப்பவில்லை என்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் பொழுது தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று நான் குரல் கொடுத்தேன்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறித்தது. இந்திராகாந்தி காலத்தில்தான் கல்வி கொள்கை மாநில பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நீட் தேர்வு நடத்தப்பட்டது.
ஜிஎஸ்டி வரி விகிதத்தை கொண்டு வந்தது சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போதுதான். இந்தியை ஆட்சி மொழியாக கொண்டு வந்தது உட்பட பல்வேறு செயல்களில் மாநில உரிமைகளை பறித்தது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தானே தவிர தற்போது அல்ல.
பிரதமர் மோடி மாநில அரசுக்கான உரிமைகளை தர வேண்டும் என்றும் மாநில கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக பிரதமர் செயல்பட்டு கொண்டிருக்கும் போது மாநில உரிமைகளை பறிக்கிறார்கள் என காங்கிரஸார் கூறுவது ஏற்புடையது அல்ல.
காசியில் நடைபெற்ற தமிழ் சங்கமத்தில் கூட தமிழின் பெருமைகளை எடுத்து காண்பிக்கப்பட்டது. முந்தைய காங்கிரஸ் பிரதமர்கள் யாராவது திருக்குறளை பற்றியோ, தமிழ் கலாச்சாரத்தை பற்றியோ பேசினார்களா?. இருக்கும் உரிமைகளை பறித்தார்களே தவிர எதுவும் அவர்கள் செய்யவில்லை.
ஜிஎஸ்டியை எதிர்த்து குரல் கொடுத்து மற்றும் பாராளுமன்றத்தில் இருந்து வெளியே வந்தது அதிமுகதான். பாஜகவுடன் ஐந்து ஆண்டுகள் கூட்டணி வைத்து ஆட்சியில் இருந்தது திமுக. அதே வேளையில் பாஜக அமைச்சரவையில் இருந்தாலும் பாஜகவை எதிர்த்து வெளியே வந்தது அதிமுக. தற்போது எங்களை பார்த்து அவர்கள் கூறுவது வேடிக்கையாக உள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பொறுத்தவரை ஆர்.கே.நகர், திருமங்கலம், அரவக்குறிச்சி என அனைத்து வகையான பார்முலாவையும் ஒன்றிணைத்து கரூர் பார்முலாவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு தலைக்குனிவான செயல்களை ஆளும்கட்சி செய்து வருகிறது.
ஜனநாயகத்திற்கு ஒரு அவமானமாகவும் கேள்விக்குறியாகவும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் செயல்பாடு இருக்கிறது. திமுக தலைமையில் நடைபெறும் இந்த தேர்தல் ஒரு ஜனநாயக படுகொலையாகவே நடந்து கொண்டிருக்கிறது.
இந்த தேர்தல் மட்டுமல்ல வருகிற பாராளுமன்ற தேர்தலானாலும், சரி குடும்ப ஆட்சியையும் ஊழலை ஒழிப்பதுதான் அதிமுகவின் கொள்கை. யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகலாம், அமைச்சர் ஆகலாம் என்ற அடிப்படையிலான ஜனநாயக கட்சிதான் அதிமுக.
இந்தியாவிலேயே திமுகவை தவிர வேறு எந்த கட்சியிலும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் பலர் முதல்வர் அந்தஸ்தை பெற்றவர்களாக உள்ளனர். ஈரோடு கிழக்கு தேர்தலில் கரூர் பார்முலா நடந்து கொண்டிருக்கும் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிரசாரம் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என அனைவருக்கும் தெரியும் என தம்பிதுரை தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu