தமிழகம் பாதுகாப்பான கைகளில் இல்லை.. கோவையில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா பரபரப்பு பேச்சு…
கோவை மேட்டுப்பாளையம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர்களை பார்த்து பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா கையசைத்தார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே பாஜக சார்பில் கோவை, நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டம் மற்றும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர் எல். முருகன், மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசியதாவது:
தமிழகம் பழமையான மொழி, கலாச்சாரம் கொண்ட ஆன்மீக பூமி. இந்தப் பகுதி இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. தற்போது கூடியுள்ள கூட்டம் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தும். மோடி தலைமையிலான இந்தியா முன்னேறி வருகிறது.
கொரோனா, உக்ரைன் போர் ஆகியவற்றுக்கு பிறகு உலக நாடுகளின் பொருளாதார நிலை மோசமடைந்துள்ள சூழலில் இந்தியாவின் பொருளாதாரம் முன்னேற்றமடைந்து வருகிறது. ஏற்றுமதியில் உலகில் இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது.
பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளுக்கு ஆட்சியிலும், கட்சியிலும் அதிகாரம் வழங்கப்பட்டு வருகிறது. 80 கோடி மக்கள் பயனளிக்கும் உணவு, தானியங்கள் திட்டம் மூலம் ஏழை மக்கள் பசியாறி கொண்டிருக்கிறார்கள். 11 கோடி மக்களுக்கு 5 லட்ச ரூபாய் மருத்துவ காப்பீடு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு பட்டியலினம் மற்றும் பழங்குடி சமுகத்தை சேர்ந்தவர்களை குடியரசு தலைவராக்கி உள்ளது. பட்டியலினம் மற்றும் பழங்குடியை சேர்ந்த பலர் மத்திய அமைச்சராக்கப்பட்டு உள்ளனர். பெண்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பெண்கள் மற்றும் இளைஞர்கள் வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தமிழகம் அதிகளவிலான மருத்துவ கல்லூரிகளை பெற்றுள்ளது. விவசாயிகள் வங்கி கணக்கில் 4 மாதத்திற்கு ஒருமுறை 2 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டு வருகிறது.
பயிர் பாதுகாப்பு திட்டம் மூலம் இழப்பீடு வழங்கப்பட்டு வருவதுடன் ஒரு லட்சம் கோடி ரூபாயை விவசாய துறைக்காக மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. நாடு முழுவதும் 220 கோடி கொரோனா தடுப்பூசி மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது.
9 மாதத்தில் 2 தடுப்பூசிகளை இந்தியா உருவாக்கி 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததுடன் 44 நாடுகளுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கி உள்ளோம். 11 மருத்துவக் கல்லூரிகள் மூலம் தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பு வலுவடைந்துள்ளது. நமது நாடு பாதுகாப்பானவர் கைகளில் உள்ளது.
ஆனால், தமிழகம் பாதுகாப்பான கைகளில் இல்லை. திமுக ஒரு குடும்ப கட்சி. திமுக என்பதற்கு வாரிசு அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து என்பது தான் விளக்கம். திமுக மக்களுக்காக ஆட்சி செய்யவில்லை. நமக்கு நாடு தான் முக்கியம். ஆனால், திமுகவினர் கொள்ளையடிக்கவே கட்சி நடத்துகிறார்கள். குடும்பத்திற்காக ஆட்சி நடத்துகிறார்கள்.
பாஜகவிற்கு முதலில் நாடு, பிறகு கட்சி அதன்பிறகு தான் தனி மனிதன். ஆனால், திமுகவில் சுயநலன் தான் முதலில் இருக்கும். பிறகு கட்சி, கடைசியாக நாடு என இருக்கிறது. திமுக என்பது கருணாநிதி அன்ட் சன்ஸ்க்கான கட்சி. காங்கிரஸ் என்பது காந்தி அன்ட் சன்ஸ்க்கான கட்சி என்று ஜே.பி. நட்டா தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu