ஆதார் எண் இணைக்கவில்லை என்றாலும் மின்கட்டணம் செலுத்தலாம்.. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு
கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்தார்.
தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்புகள், கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் ஆகியோர் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
மேலும், ஆதார் எண்ணை இணைப்பதற்காக இணையவழி இணைப்பு முகவரியையும் மின் வாரியம் வெளியிட்டு உள்ளது. ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், மின் வாரிய இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்த முற்படும்போது, ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும் என்ற அறிவிப்பு வருகிறது.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே இணையதளத்தின் மூலம் மின்கட்டணம் செலுத்த முடியும் என்பதால் மின் நுகர்வோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த விவகாரத்தில் அரசு கவனம் செலுத்தி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மின்நுகர்வோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், ஆதார் எண் இணைக்கவில்லை என்றாலும் மின்கட்டணம் செலுத்தலாம் என தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவை பீளமேடு பகுதியில் திமுக இளைஞரணிச் செயலாலர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா இன்று நடைபெற்றது. இதில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு, 3,500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் 45 வது பிறந்த நாளை முன்னிட்டு 3,500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
211 கோடி ரூபாய் அளவிலான சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. பல்வேறு சாலைகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்து உள்ளது. மார்ச் மாதத்திற்குள் முழுமையாக நிதி விடுவிக்கப்பட்டு ஒப்பந்தம் வழங்கி, பழுதடைந்த சாலைகள் புதுப்பிக்கப்படும்.
கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 10 சதவீத பணிகளும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் முடிவடையும். அதிமுக ஆட்சியில் நடந்த வளர்ச்சி திட்டங்களை, 5 ஆண்டுகளுக்குள் முதலமைச்சர் இரட்டிப்பாக்கி தருவார்.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக அதிமுக, பாஜகவினர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புகிறார்கள். மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண் இணைக்கவில்லை என்றாலும் மின் கட்டணம் செலுத்தலாம். ஆதார் எண் இணைப்பது நல்லது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது அவசியம்.
பெயர் மாற்றம், ஆதார் எண் இணைப்பு ஆகியவைகளுக்காக விரைவில் முகாம்கள் நடத்தப்படும். ஆதார் எண் இணைக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மின்சாரத் துறையை சீர் திருத்தம் செய்ய ஆதார் எண் இணைப்பது அவசியம்.
கோவையில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு தரப்படுகிறது. ஆனால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வதில்லை.
சிறு, குறு நடுத்தர தொழில்துறையினர் உத்தேச மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்படி 10 சதவீத கட்டணம் குறைக்கப்பட்டது. மத்திய அரசின் அழுத்தத்தால் தான் கட்டண உயர்வு வந்தது. மின்சாரத் துறை ஒரு லட்சத்து 51 ஆயிரம் கோடி கடனில் உள்ளது.
மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் குறைந்த கட்டணமே உயர்த்தப்பட்டுள்ளது. தொழில் துறையினர் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. தொழில் துறையினர் குறைந்த அளவிலான மின் கட்டண உயர்விற்கு ஆதரவளித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu