ஆன்லைன் மூலம் வழக்குகளுக்கு தீர்வு கண்டதில் தமிழகம் முதலிடம்: உயர்நீதிமன்ற நீதிபதி

ஆன்லைன் மூலம் வழக்குகளுக்கு தீர்வு கண்டதில் தமிழகம் முதலிடம்: உயர்நீதிமன்ற நீதிபதி
X

புதிய நீதிமன்றங்களை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.ராஜா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் 

ஆன்லைன் மூலம் வழக்குகளுக்கு தீர்வு கண்டதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக கோவையில் நடந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா கூறினார்

வணிக வழக்குகளை விசாரிக்க கோவை காந்திபுரத்தில் உள்ள மாநகராட்சி சமூகநலக்கூடத்தில் வணிக நீதிமன்றம் அமைக்கப் பட்டு உள்ளது. இதேபோல் கோவை மாவட்டம் அன்னூரில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர். நீதிமன்றம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய நீதிமன்றங்களின் திறப்பு விழா நடைபெற்றது. புதிய நீதிமன்றங்களை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.ராஜா ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.

கமர்சியல் நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் நடந்த வழக்கு விசாரணைகளை அவர் ஆய்வு செய்தார். பின்னர் கோவை ரேஸ்கோர்சில் உள்ள தமிழ்நாடு நீதித்துறை பயிலரங்க அகாடமியில் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. கோவை மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் வரவேற்றார்.

இதில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.ராஜா கலந்து கொண்டு பேசுகையில், கடந்த 2015-ம் ஆண்டில் கொண்டு வந்த வணிக வழக்குகள் சட்டம் புரட்சிகரமான சட்டம். வணிக வழக்குகள் சட்டத்தில் உள்ள 23 பிரிவுகள் நாட்டின் பொருளாதாரத்தை துடிப்பானதாக ஆக்கவே கொண்டு வரப்பட்டன.

புதிய கமர்சியல் நீதிமன்றத்தில் 6 மாதங்களுக்குள் வழக்குகளுக்கு தீர்வுக்காண முடியும். இந்த நீதிமன்ற நடைமுறை விரைவில் மற்ற வழக்குகளை விசாரிக்கும் சிவில் நீதிமன்றங்களில் பின்பற்றப்படக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

வணிக வழக்குகள் முதலில் சமரச முறையில் எடுத்துக் கொள்ளப்பட்டு, அங்கு தீர்வுக்காணப்படாத பட்சத்திலேயே நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வணிக நீதிமன்றங்கள் உதவும். இந்திய சட்டத்துறை விரைவில் அனைவராலும் பாராட்டப்படக் கூடியதாக இருக்கும்.

2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 2 ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில் இந்தியா முழுவதும் 63 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட் டது. இதில் தமிழகத்தில் 14 லட்சம் வழக்குகளுக்க தீர்வு காணப் பட்டன. அதாவது 21 சதவீத வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டதால் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் பிடித்தது.

கடந்த 2019-ம் ஆண்டு சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் இல்லாத நிலையை கொண்டு வந்தோம். தற்போது 2 முதல் 3 ஆண்டுகள் பதிவான வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன என்று கூறினார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!