உக்கடம் வாலாங்குளத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்

உக்கடம் வாலாங்குளத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்
X

பைல் படம்.

உக்கடம் வாலாங்குளத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

கோவை உக்கடம் வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. தற்போது வாலாங்குளத்தில் படகு சவாரி திட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் வாலாங்குளத்தில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். இருப்பினும் ஸ்மார்ட் சிட்டி பூங்காவில் காதல் ஜோடிகள் நீண்ட நேரம் சில்மிஷ லீலைகளில் ஈடுபட்டு வருவதாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார் எழுந்துள்ளது. மேலும் வாலாங்குளத்தின் கரையில் போதை மாத்திரை, கஞ்சா விற்பனை கும்பல், பிக்பாக்கெட் திருடர்கள் அச்சமும் தொடர்ந்து நிலவி வருகிறது.



மேலும், ஸ்மார்ட் சிட்டி பூங்கா பகுதியில் டாஸ்மாக் கடையும் உள்ளது. இங்கே மதுகுடிக்கும் கும்பல் பூங்காவில் உலா வந்து பொதுமக்களுக்கு இடையூறு செய்வதும் வாடிக்கையாக நடக்கிறது. போலீசார் எப்போதாவது வந்து அடாவடி கும்பலை விரட்டியும் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில், வாலாங்குளத்தின் முக்கிய பகுதிகளை கண்காணிக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டது.

இரவு நேரத்திலும் காட்சிகளை துல்லியமாக பதிவு செய்யும் வகையில் சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றது. இதன் மூலமாக குளக்கரையில் நடக்கும் அத்துமீறல்களையும், குற்றங்களையும் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது இடங்களில் அத்துமீறுவோரின் அட்டூழியம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்காணிப்பு கேமரா காட்சிகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் பிரதான அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.மேலும் இந்த பகுதியில் காவலாளிகளை நியமித்து அடாவடி கும்பல்களை வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Tags

Next Story
தூய்மைப் பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படாததால் ஆர்ப்பாட்டம்..!