அரசு பள்ளியில் உள்விளையாட்டு அரங்கம்: வாவ், வடுகன்காளிபாளையம் பள்ளி!
உள்விளையாட்டு அரங்கினை, தொழிலதிபர் சாதிக் அலி திறந்து வைத்தார். (இடது) விளையாட்டு அரங்கினை பார்வையிட்ட விருந்தினர்கள்.
கோவை சூலூர் ஒன்றியம், செம்மாண்டாம்பாளையம் ஊராட்சியில் செயல்பட்டு வருகிறது, வடுகன்காளிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி. மாவட்டம் என்று பார்த்தால் கோவை எல்லைக்குள் இப்பள்ளி வந்தாலும், திருப்பூர் மாவட்ட எல்லைக்கு அருகாமையில் உள்ளது; மங்கலம், வஞ்சிபாளையம், செம்மாண்டம்பாளையம், சாமந்தக்கோட்டை, புதுப்பாளையம் என, திருப்பூர் மாவட்ட கிராம மாணவர்கள் அதிகளவில் இங்கு பயின்று வருகின்றனர்.
சேர்க்கைக்கு காத்திருக்கும் மாணவர்கள்
கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து மாணவர் சேர்க்கை அதிகரித்து வரும் பள்ளியாக, இது திகழ்கிறது. கடந்தாண்டு 262 மாணவர்கள் பயின்று வந்த நிலையில், இம்முறை 410-ஐ தொட்டிருக்கிறது. இப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்காக, உள்ளூர் முக்கிய பிரமுகர்களின் பரிந்துரையை கோருவது, சேர்க்கைக்காக மாணவர்கள் காத்திருப்பு பட்டியலில் இருப்பது போன்றவையே, இப்பள்ளியின் சிறப்புக்கு கட்டியம் கூறுவதாக உள்ளது.
தனியார் பள்ளிக்கு நிகராக, கிராமப்புறத்தில் உள்ள இந்த அரசு பள்ளி ஜொலிக்கிறது. கல்வியிலும் சரி, தரம், அடிப்படை வசதிகளிலும் சரி, தனியார் பள்ளிகளுடன் போட்டி போடுகிறது என்றால், இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக, துடிப்புடன் பணியாற்றி வரும் சிங்காரவேலுவின் கடின உழைப்பும், அவருக்கு பக்கபலமாக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் ஆசிரியர்களுமே முக்கிய காரணம்.
உதவிக்கரம் நீட்டும் நல்உள்ளங்கள்
கல்வி போதிப்பதில் தரம், மாணவர்களின் திறனை கண்டறிந்து, அவர்களை ஊக்குவிப்பதில் வேகம், பல்வேறு போட்டிகளை நடத்துவதில் ஆர்வம் என்று, எப்போதும் மாணவர்களின் நலன் பற்றியே சிந்தித்து வருகிறார் தலைமை ஆசிரியர் சிங்காரவேலு. இதுபற்றி தலைமை ஆசிரியர் சிங்காரவேலுவை கேட்டால், சக ஆசிரியர்களின் ஆதரவு, தொழில்துறையினர், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் உதவிக்கரம் நீட்டுவதுதான் என்று தன்னடக்கத்தோடு கூறுகிறார்.
திருப்பூரில் பிரபலமான ஈஸா கார்மெண்ட்ஸ் நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் இப்பள்ளியின் வளர்ச்சிக்கு பல்வேறு வகையிலும் பங்களிப்பு செய்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில், ரூ. 15 லட்சம் செலவில், வடுகன்காளிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் உள்விளையாட்டு அரங்கை அமைத்துத் தந்துள்ளது. இதுதவிர, மாணவ, மாணவியருக்கு தனித்தனியே இரு கழிப்பறைகளை, ரூ. 3.5 லட்சம் மதிப்பீட்டில் ஈஸா கார்மெண்ட் கட்டித் தந்துள்ளது.
உள்விளையாட்டு அரங்கம் திறப்பு
உள்விளையாட்டு அரங்கின் திறப்பு விழா, அண்மையில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தொழிலதிபர் சாதிக் அலி, உள் விளையாட்டு அரங்கத்தையும், வட்டாரகல்வி அலுவலர் மரியஜோசப், கல்வெட்டினையும் திறந்து வைத்தனர். டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட பல விளையாட்டு உபகரணங்கள், உள்விளையாட்டு அரங்கில் உள்ளன. விழாவில், பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மாறுவேட போட்டிகள் நடந்தன.
வட்டார கல்வி அலுவலர் நேசமணி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் நிர்மலா ரெஜிமா, தலைமையாசிரியர் சிங்காரவேல், சக ஆசிரியர்கள், கிராம முக்கியப் பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இப்பள்ளியின் அருகாமையில் உள்ள அமிர்தம் சைசிங், கோல்டு பிரீப்ஸ், யாஸின் டெக்ஸ், சவுத் இந்தியன் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களும், வடுகன்காளிபாளையம் அரசுப் பள்ளிக்கு தேவையான இதர மேசை, இருக்கைகள், பிற தளவாடப் பொருட்களை வழங்க முன்வந்துள்ளன. வகுப்பறைகளில், மாணவர்களுக்கு மின் விசிறி வசதி உள்ளிட்டவையும் செய்து தரப்படுகிறது.
கிராமப்புறத்தில் உள்ள ஒரு அரசு நடுநிலைப்பள்ளி, கல்விப்பணியில் தழைத்தோங்குவது, மற்ற பள்ளிகளுக்கெல்லாம் ஒரு நல்ல முன்னுதாரணமாகும். கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்ற வாக்கினை நிரூபிப்பது போல், உதவும் உள்ளங்களை நாடிச் சென்று தட்டுகிறார், ஆசிரியர் சிங்காரவேலு. சாதிக் அலி போன்ற கொடையாளர்கள், வாரி வழங்குகின்றனர். பள்ளியின் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருக்கும் தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்கள், கல்விக்கொடை வள்ளல்களின் பணி போற்றுதலுக்குரியது. நல்ல மனம் படைத்த நீங்களும் கூட, இப்பள்ளிக்கு உதவ முன்வரலாமே!
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu