விசைத்தறி உரிமையாளர்கள் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்
விசைத்தறி உரிமையாளர்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்.
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு வழங்கக் கோரி கடந்த 25 நாட்களாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கோவை திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு லட்சம் விசைத்தறி கூடங்கள் இயக்கப்படாததால், இதனை நம்பி உள்ள ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு விசைத்தறி உரிமையாளர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் கூலி உயர்வு வழங்க மறுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று விசைத்தறி கூடங்களிலும், வீடுகளிலும் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் சோமனூர் கிளை தலைவர் பழனிச்சாமி கூறியதாவது: மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் கூலி உயர்வுக்கான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும், ஜவுளி உறுபத்தியாளர்கள் தங்களுக்கு கூலி உயர்வு வழங்கவில்லை. கடந்த 24 நாட்களாக காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் இன்று 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களிலும், விசைத்தறி தொழிலாளர்கள் வீடுகளிலும் கருப்புகொடி கட்டி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளதாகவும் அடுத்த கட்டமாக நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்த போவதாக தெரிவித்தார். மேலும் வேலை நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு 1.25 கோடி மீட்டர் துணி உற்பத்தியும் நாளொன்றுக்கு 60 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாக தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu