குடிநீர் குழாய் பதிப்பதாக கூறி பண மோசடி: முன்னாள் பேரூராட்சித் தலைவர் மீது வழக்குப்பதிவு
தளபதி முருகேசன்
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பேரூராட்சியில் கடந்த 2016ஆம் ஆண்டு குடிநீர் குழாய் பதிப்பதில் முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்ணம்பாளையம் சிறப்புநிலை பேரூராட்சியின் உதவி செயற்பொறியாளர் மேனகா, செயல் அலுவலர் ரேணுகா, உதவி செயற்பொறியாளர் மகேந்திரன், ஒப்பந்ததாரர் பார்த்திபன், புவனேஸ்வரி மற்றும் அப்போதைய பேரூராட்சித் தலைவர் தளபதி முருகேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பேரூராட்சி மன்ற நிர்வாக ஒப்புதலின்றி 94.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள திட்டம் தயார் செய்யப்பட்டதுடன், இந்த பணியை 27 பிரிவுகளாக பிரித்து ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க அலுவலர்கள் மேகனா மற்றும் மகேந்திரன் ஆகியோர் உடந்தையாக இருந்ததும், இதற்கு பேரூராட்சி தலைவராக இருந்த திமுகவைச் சேர்ந்த தளபதி முருகேசன் ஒப்புதல் வழங்கியதும் தெரியவந்தது. குழாய் பதிக்கும் பணிக்கு ஒப்பந்தம் பெற்ற பார்த்திபன் மற்றும் புவனேஸ்வரி தரமற்ற பிவிசி குடிநீர் குழாய்களை பதித்ததும், அதன் மூலம் சுமார் 48 லட்சம் ரூபாய் அளவுக்கு அரசு நிதி முறைகேடு செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் மீதும் வழக்குப் பதிய தமிழக அரசு கடந்த மார்ச் 29ஆம் தேதி அனுமதி வழங்கியிருந்த நிலையில், தற்போது முன்னாள் பேரூராட்சித் தலைவர் தளபதி முருகேசன் உட்பட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu