நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும்: அமைச்சர் செந்தில் பாலாஜி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக  அமோக வெற்றி பெறும்: அமைச்சர் செந்தில் பாலாஜி
X

அமைச்சர் செந்தில் பாலாஜி.

பொதுமக்களிடையே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கோவை மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். காலை இருகூர் பகுதியில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், தொடர்ந்து சூலூர், சோமனூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். சோமனூரில் கருமத்தம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி மக்களிடையே பேசினார்.

அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, பெண்கள் இலவசமாக பயணம் செய்யவும், உடல்நலம் பாதிக்கப்பட்டால் வீட்டிலேயே மருத்துவம் பார்த்துக்கொள்ள மக்களை தேடி திட்டத்தையும் முதலமைச்சர் கொண்டு வந்ததாகவும், மக்களின் தேவையை அறிந்து முதல்வர் செயல்பட்டு வருவதாகவும் புகழாரம் சூட்டினார். உள்ளாட்சியில் நிலவும் பிரச்சனைகளை தீர்க்க திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர், திமுக தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிட கூடிய வேட்பாளர்கள் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள் எனவும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் முதல் தேர்தல் பிரச்சாரத்தை காணொலி வாயிலாக முதல்வர் துவக்கியுள்ளார் எனவும் கூறினார். கோவை மாவட்டத்தில் 300 இடங்களில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் பங்கேற்ற கூட்டத்தில் முதல்வர் உரையாற்றியதாக குறிப்பிட்ட அவர், 8 மாதங்களில் செய்த சாதனைகள் குறித்தும், எதிர்காலத்தில் அரசு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் பிரச்சாரத்தில் முதல்வர் பேசியதாகக் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகள் 7 நகராட்சிகள் என 811 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும் நிலையில், முதல்வரின் நல்லாசியுடன் மாவட்டம் முழுவதும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் 811 வார்டுகளிலும் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். பொதுமக்களிடையே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது எனவும், இந்த உள்ளாட்சித் தேர்தலில் 100% திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் எனவும், தமிழக முதல்வருக்கு இந்த வெற்றியை தர பொதுமக்கள் தயாராக உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

கோவை,திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் மேற்கொண்டு வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேசி வருகின்றனர். போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை விரைந்து எடுப்பார்கள் என்றார்.‌

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!