விசைத்தறி கூலி உயர்வை அமல்படுத்த கோரி கோவை எம்பி நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம்
கோவை எம்பி பி.ஆர். நடராஜன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டம்.
கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் பிரச்சனைகளை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை, திருப்பூர் மாவட்ட குழுக்களின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சோமனூரில் நடைபெற்றது. சோமனூர் மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பி.ஆர்.நடராஜன் எம்பி செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அமைச்சர்கள் மற்றும் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் முன்னிலையில் ஏற்படுத்திய கூலி உயர்வு தொடர்பான ஒப்பந்தத்தை ஜவுளி உற்பத்தியாளர்கள் நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது.
முதலாளிகளின் இச்செயலை கண்டிப்பதுடன், கூலி உயர்வு வழங்க முதலாளிகளை தமிழக அரசு நிர்பந்திக்க வேண்டும். கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாநில அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் சட்டரீதியிலான உரிமை இல்லை எனவும் சட்ட உரிமையை ஏற்படுத்த மாநில அரசாங்கத்திடம் தெரிவிப்பதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனை ஏற்கமுடியாது.
தங்களது முன்னிலையில் போடப்பட்ட ஒப்பந்தம் மீறப்படுகிறது என்ற உணர்வோடு தமிழக அமைச்சர்கள் இந்த விவகாரத்தை கையில் எடுக்க வேண்டும். மாநில அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் முன்னிலையில் போடப்பட்ட ஒப்பந்தம் மீறப்படும்போது மாநில அரசு தலையிட வேண்டும். மாறாக தொழிற்சங்கம் மற்றும் விசைத்தறி தொழிலாளர் சங்க தலைவர்களை ஏதோ ஒரு காரணத்துக்காக காவல்துறையைக் கொண்டு நிர்பந்தபடுத்துகிற ஏற்பாட்டை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம். மாநில அரசு சட்டம் ஒழுங்கு நிலையை கணக்கில் எடுத்துக் கொண்டு இந்த பிரச்சனையை ஒரு வாரத்திற்குள் தீர்வை ஏற்படுத்த வேண்டும். மாநில அரசு ஏற்கனவே கொடுத்திருக்கும் வாக்குறுதியின்படி சோமனூர் பகுதியில் ஜவுளிப் பூங்காவை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu