ஜவுளி உறபத்தியாளர்களை கண்டித்து விசைத்தறி உரிமையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விசைத்தறி உரிமையாளர்கள்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக விசைத்தறி தொழில் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து பாவு நூல் வாங்கி அதனை காடா துணியாக உற்பத்தி செய்து கொடுக்கின்றனர். அதற்கான கூலி நிர்ணயம் செய்து அதன் அடிப்படையில் கூலி வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு 7 ஆண்டுகளாக விசைத்தறிகளுக்கான கூலி உயர்வு வழங்கப்படவில்லை . இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து புதிய கூலி உயர்வுக்கான கோரிக்கை வைத்து ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.
அதன் பிறகு 24.11.2021 ந்தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மாநில அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளாலும் அறிவிக்கப்பட்ட பல்லடம் இரகத்திற்கு 20% சோமனூர் இரகத்திற்கு 23% கூலி உயர்த்தப்பட்டது.
ஆனால் அதை அமுல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வரும் ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து 9 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் ஈடுபட்டனர்.
திருப்பூர் கோவை மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ. 60 கோடி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது நேரடியாக இரண்டு லட்சமும் மறைமுகமாக 2 லட்சம் என 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை தொழிலாளர் நலத்துறை ஆணையத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று காரணம்பேட்டையில் ஜவுளி உறபத்தியாளர்களை கண்டித்து திருப்பூர் கோவை மாவட்டங்களை சேர்ந்த மங்கலம், பல்லடம், சோமனூர், 63 வேலம்பாளையம் உள்ளிட்ட 9 சங்கங்களை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.1000 த்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu