தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அண்ணாமலை மீது வழக்குப்பதிவு
Coimbatore News- பாஜக மாநிலத் தலைவர், வேட்பாளர் அண்ணாமலை (கோப்பு படம்)
Coimbatore News, Coimbatore News Today- பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் நேற்றிரவு 10:30 மணி அளவில் சிந்தாமணி புதூரில் இருந்து ஒண்டிப்புதூர் வரும் வழியில் அவருடன் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். இரவு 10 மணியுடன் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி இல்லை என்ற நிலையில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பிரச்சாரம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
அதற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்த நிலையில், பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் மேற்கொண்டு செல்வதற்கு காவல் துறை அனுமதி மறுத்த நிலையில், வேனில் இருந்து இறங்கி வந்த பாஜக வேட்பாளர் அண்ணாமலை காவல் துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சட்டத்தை மீறி இரவு நேரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது என காவல் துறையினர் உறுதியாக தெரிவித்தனர். அவர்களுடன் வாக்குவாதம் மேற்கொண்ட அண்ணாமலை இரவு பத்து மணிக்கு மேல் தான் பிரச்சாரம் செய்யவில்லை என்றும், கையெடுத்து கும்பிட்டபடிதான் வந்ததாகவும் தெரிவித்தார். ஆனால் காவல் துறையினர் தொடர்ந்து செல்ல அனுமதி மறுக்கவே பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஒண்டிபுதூர் சாலையில் இரவு நேரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது தேர்தல் அதிகாரி சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் 2 பிரிவுகளின் கீழ் அண்ணாமலை உள்ளிட்டோர் மீது சூலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல இரவு பத்து மணிக்கு பிறகு ஒண்டிபுதூர் பகுதியில் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டதாக, தேர்தல் அலுவலர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை மீது சிங்காநல்லூர் காவல் துறையினர் அனுமதி இன்றி ஒன்று கூடுதல், முறையற்ற தடுப்பு, வெடிபொருட்களை தவறாக கையாளுதல், பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்தல் ஆகிய 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu