தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்காததால் காவல்துறையில் புகார்

மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஐடிஐ செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு கடந்த 2017-19, 2018- 2020, 2019-2021ம் கல்வியாண்டில் ஐடிஐயில் படித்த மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரிடமும் ரூ.5 முதல் ரூ.10 ஆயிரம் வரை கல்வி கட்டணத்தை விட கூடுதலாக பெற்றதாக கூறப்படுகிறது.
மேலும், மாணவர்களின் கல்வியாண்டு முடிந்த பின்னரும் அவர்களுக்கான சான்றிதழை வழங்காமல் மாணவர்களை இழுத்தடித்ததாக மாணவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஆனால், ஒரு சில மாணவர்களுக்கு மட்டுமே சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, கடந்த 10 நாட்களுக்கு முன் இந்நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்த ஐடிஐ-யில் படித்த முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு கல்விச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் செய்து வருவதாக கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கல்லூரி நிர்வாகம் 15 நாட்களுக்குள் மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ் மற்றும் அவர்கள் கட்டணத்தை விட அதிகமாக கட்டிய ரொக்கப்பணத்தை வழங்குவதாக மாணவர்களிடம் கூறியதாக தெரிகிறது. இதனிடையே சான்றிதழ் மற்றும் பணத்தை இழந்த 17 மாணவர்கள் நேற்று மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஐடிஐயில் படித்தபோது தங்களிடம் பணம் கையாடல் செய்துள்ளதுடன், சான்றிதழ்களும் வழங்கவில்லை என புகார் அளித்தனர்.
இதனையடுத்து, மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் செல்வ நாயகம் உள்ளிட்டோர் ஐடிஐயின் முதல்வரை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர்.
அதன்பின் கல்லூரியில் படித்து சான்றிதழ் பெறாதவர்களுக்கு முதற்கட்டமாக சான்றிதழ்களை வழங்க ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். தொடர்ந்து மாணவர்கள் இழந்த பணத்தை விரைவில் பெற்று தருவதாக கூறியதை தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து கல்லூரிக்கு சென்று சான்றிதழ்களை பெற்றுச்சென்றுள்ளனர். மேலும், இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu